

இந்திய பங்குச்சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச்சந்தை (NSE) நாளை (ஜனவரி 15) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வார இறுதி நாட்களில் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் நாளை மகாராஷ்டிராவில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால், இந்திய பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி தேர்தல் காரணமாக மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறையின் காரணமாக பங்கு வர்த்தகம் மற்றும் தீர்வு சேவைகளும் நாளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இது ஒரு வழக்கமான வார இறுதி விடுமுறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் சார்பில் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலிலும் நாளைய தினம் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி சிறப்பு விடுமுறை சேர்க்கப்பட்டதால், 2026 ஆம் ஆண்டில் வார இறுதி விடுமுறைகளைத் தவிர்த்து, இந்திய பங்குச் சந்தைகள் மொத்தம் 16 நாட்கள் மூடப்பட்டிருக்கும். ஜனவரி 26 குடியரசு தினத்தன்று இந்த மாதத்தின் இரண்டாவது சந்தை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
பாம்பே பங்குச் சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு (NSE) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நிறுத்தி வைக்கப்படும். இந்த விடுமுறை பங்குகள் (Equity), டெரிவேட்டிவ்ஸ் மற்றும் கமாடிட்டி உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்தும்.
ஜனவரி 15 ஆம் தேதியன்று காலாவதியாகும் ஒப்பந்தங்கள் அனைத்தும், பங்குச்சந்தை விதிமுறைப்படி, ஒரு நாளுக்கு முன்பே தீர்வு செய்யப்படும்.
இந்திய மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் இரண்டும் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இவையிரண்டும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. மேலும் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. நிறுவனங்கள் நிதி திரட்டவும், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கவும், விற்கவும் பங்குச் சந்தைகள் உதவுகின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 29 மாநகராட்சிகளில் வாக்குப்பதிவை எளிதாக்கும் வகையில், மாநில அரசு நாளை பொது விடுமுறையை அறிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் அடுத்த நாள் ஜனவரி 16 ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது.
மொத்தமாக 893 வார்டுகளில் உள்ள 2,869 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 15,931 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மாநகராட்சி தேர்தல் காரணமாக மாநிலத்தில் வங்கி செயல்பாடுகளும் நிறுத்தப்படுகின்றன. தேர்தல் அல்லது முக்கியமான பொது நிகழ்வுகளின் போது வழக்கமான வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்பதால், சிறப்பு விடுமுறைகள் பொதுவாக அறிவிக்கப்படுகின்றன.