

ரயில் பயணத்தின் போது நீங்கள் கொண்டு செல்லும் லக்கேஜ் அளவுகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டி வரும்..
ரயில் பயணிகள் தங்களது பயணத்தின் போது எவ்வளவு லக்கேஜ் கொண்டு செல்லலாம் என்பது குறித்த தெளிவான புரிதல் இல்லாமல் இருக்கின்றனர். இதன் காரணமாக, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பொருட்களைக் கொண்டு செல்லும்போது, ரயில்வே அதிகாரிகளின் திடீர் சோதனையில் சிக்கி அபராதம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக, பெரிய சூட்கேஸ்கள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி (TV) போன்ற மின்னணு சாதனங்களைக் கொண்டு செல்லும் போது, அவற்றுக்கு முறையான முன்பதிவு (Booking) செய்திருப்பது அவசியமாகும்.
வகுப்பு வாரியான எடை வரம்புகள் பயணிகள் பயணிக்கும் வகுப்பிற்கு ஏற்ப இலவசமாக லக்கேஜ் கொண்டு செல்வதற்கான எடை வரம்புகள் மாறுபடுகின்றன. பொதுப் பெட்டிகளில் 35 கிலோ வரையிலும், ஸ்லீப்பர் மற்றும் மூன்றாம் வகுப்பு ஏசி (3-Tier AC) பெட்டிகளில் 40 கிலோ வரையிலும் கட்டணமின்றி அனுமதி உண்டு. அதேபோல், இரண்டாம் வகுப்பு ஏசி (2-Tier AC) பெட்டிகளில் 50 கிலோ வரையிலும், முதல் வகுப்பு ஏசி (First Class AC) பெட்டிகளில் அதிகபட்சமாக 70 கிலோ வரையிலும் எந்தவித கூடுதல் கட்டணமுமின்றி பொருட்களை எடுத்துச் செல்லலாம்.
இந்நிலையில், ரயில் பயணங்களின் போது பயணிகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இலவச அளவை விடக் கூடுதல் லக்கேஜ் கொண்டு சென்றால், அதற்கு அபராதம் விதிக்கப்படும். சாதாரண லக்கேஜ் கட்டணத்தை விட 1.5 மடங்கு கூடுதல் தொகையை அபராதமாகக் கட்ட நேரிடும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பயணிகள் தங்கள் இருக்கைக்கு அருகே கொண்டு செல்லும் பெட்டி, சூட்கேஸ் அல்லது டிரங்க் பெட்டி ஆகியவை குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும். அதாவது, 100 செ.மீ நீளம், 60 செ.மீ அகலம் மற்றும் 25 செ.மீ உயரம் என்ற அளவிற்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.நிர்ணயிக்கப்பட்ட அளவை விடப் பெரியதாக இருக்கும் பெட்டிகளைப் பயணிகள் அமரும் பெட்டிக்குள் (Coach) எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. இத்தகைய பெரிய லக்கேஜ்களை முன்கூட்டியே பதிவு செய்து, பிரேக் வேன் (Brake Van) அல்லது பார்சல் வாகனங்கள் மூலம் மட்டுமே அனுப்ப முடியும்.
தனிப்பட்ட பயன்பாட்டிற்கான பொருட்களை மட்டுமே பயணிகள் பெட்டிக்குள் கொண்டு செல்ல வேண்டும். லாப நோக்கத்திற்காகவோ அல்லது விற்பனைக்காகவோ கொண்டு செல்லப்படும் வணிகப் பொருட்களைப் பயணிகள் பெட்டிக்குள் லக்கேஜாக எடுத்துச் செல்ல அனுமதியில்லை.