

"உடைத்த கடலை" அல்லது "வறுத்த கடலை" என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது அதன் மொறுமொறுப்பான சுவைதான். ஏழைகளின் பாதாம் என்று வர்ணிக்கப்படும் இது, மாலையில் டீ குடிக்கும்போதும், ஸ்நாக்ஸ் நேரத்திலும் நம் கையில் இருக்கும் ஒரு முக்கிய உணவு.
புரதச்சத்து நிறைந்தது என்பதால் குழந்தைகளுக்கும் தைரியமாக கொடுப்போம். ஆனால், ஆரோக்கியம் என்று நினைத்து நாம் சாப்பிடும் இந்தக்கடலை, உண்மையில் நம் உடலுக்கு உலை வைக்கும் விஷமாக மாறினால் எப்படி இருக்கும்?
ஆம், விற்பனையை அதிகரிக்க வியாபாரிகள் செய்யும் சில தில்லுமுல்லு வேலைகளால், நாம் அறியாமலே ரசாயனத்தை காசு கொடுத்து வாங்கித் தின்னும் ஆபத்தான நிலைமை உருவாகியிருக்கிறது.
ஏன் கலப்படம் செய்கிறார்கள்?
சாதாரணமாகக் கடையில் குவித்து வைத்திருக்கும் பொட்டுக்கடலையைப் பார்த்தால், அப்படியே தங்கம் போல "தகதக"வென மஞ்சள் நிறத்தில் மின்னும். நாமும், "ஆஹா! எவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருக்கு" என்று நம்பி அதைத்தான் வாங்குவோம். ஆனால், அந்தப் பளபளப்புதான் ஆபத்து.
உண்மையில், பழைய ஸ்டாக் கடலைகள் நாட்கள் செல்லச் செல்ல மங்கிப்போய், வெளிறிய நிறத்தில் மாறிவிடும். அந்தப் பழைய சரக்கை, புதிது போலக் காட்டவும், வாடிக்கையாளர்களைக் கவரவும், வியாபாரிகள் சிலர் மஞ்சள் நிறத்திலான சில ரசாயனப் பொடிகளை அல்லது செயற்கை நிறமூட்டிகளை அதில் கலக்கிறார்கள்.
கண்டுபிடிப்பது எப்படி?
நல்ல கடலைக்கும், சாயம் பூசிய கடலைக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிப்பது ரொம்ப சுலபம்.
கடலையை வாங்கும்போதே ஒரு கைப்பிடி எடுத்து உள்ளங்கையில் வைத்து கசக்கிப் பாருங்கள். உங்கள் கையில் மஞ்சள் நிறம் அல்லது பவுடர் போல ஏதாவது ஒட்டுகிறதா? அப்படியானால் அது கண்டிப்பாகக் கலப்படம்தான். இயற்கையான கடலையில் சாயம் கையில் ஒட்டாது.
வீட்டுக்கு வந்ததும், ஒரு கைப்பிடி கடலையை எடுத்து, ஒரு கண்ணாடி டம்ளர் தண்ணீரில் போடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் கழித்துப் பார்க்கும்போது, தண்ணீர் மஞ்சள் நிறமாகவோ அல்லது கலங்கலாகவோ மாறியிருந்தால், உஷாராகிவிடுங்கள். அது முழுக்க முழுக்க சாயம் ஏற்றப்பட்டது. உண்மையான கடலை தண்ணீரின் நிறத்தை மாற்றாது.
உடலுக்கு என்ன கேடு?
இந்த ரசாயனங்கள் கலந்த கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டால், சாதாரண வயிற்று வலி, அஜீரணம், அல்சர் தொடங்கி, நீண்ட காலத்தில் குடல் சம்பந்தப்பட்ட பெரிய நோய்கள் கூட வரலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
"மின்னுவதெல்லாம் பொன்னல்ல" என்ற பழமொழி பொட்டுக்கடலைக்கும் நூற்றுக்கு நூறு பொருந்தும். இனிமேல் கடைக்குச் சென்றால், கண்ணைப் பறிக்கும் பளபளப்பை பார்த்து ஏமாறாதீர்கள். கொஞ்சம் மங்கிய நிறத்தில் இருந்தாலும் பரவாயில்லை, அது இயற்கையானதா என்று சோதித்து வாங்குவதே புத்திசாலித்தனம்.
ருசியை விட, நம் குடும்பத்தின் ஆரோக்கியம் முக்கியம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)