10 ரூபாய்க்கு சிகிச்சை அளித்த ‘மனிதநேய மருத்துவர்’ டி.கே.ரத்தினம் காலமானார்...

வைத்தியம் பார்க்க 10 ரூபாய் மட்டுமே வாங்கிய உயர்ந்த உள்ளம் கொண்ட மருத்துவர் டி.கே.ரத்தினம் பிள்ளை காலமானார்.
10 rupees doctor rathinam pillai
10 rupees doctor rathinam pillaiimg credit - 1newsnation.com
Published on

உலகிலேயே மிகவும் உன்னதமான, மக்களுக்கு சேவை செய்யும் பணி என்றால் அது மருத்துவத்துறை என்று சொல்லலாம். மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மாத்திரை மட்டும் அல்லாமல் மருத்துவரின் அன்பும், அக்கறையும் அவசியம் தேவை. மருத்துவத்துறையை சேர்ந்த பலபேர் சேவை மனப்பான்மையுடன் பணி செய்து வருகின்றனர். மக்களுக்காக தங்கள் வாழ்நாளை தியாகம் செய்த எத்தனையே மருத்துவர்கள் இந்த நாட்டில் உள்ளனர். அப்படி ஒருவர் தான் மருத்துவர் டி.கே.ரத்தினம் பிள்ளை.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் 96 வயதான மருத்துவர் டி.கே.ரத்தினம் பிள்ளை. இவர் பல ஆண்டுகளாக 10 ரூபாய் மட்டும் கட்டணமாக பெற்றுக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். 1968-ல் பட்டுக்கோட்டைடியில் கிளினிக் தொடங்கிய இவர் ஆரம்பத்தில் மருத்துவம் பார்க்க இரண்டு ரூபாய் மட்டும் வாங்கி வந்தார். பின்னாளில் ஐந்து ரூபாயாக உயர்த்தினார்.

அதனை தொடர்ந்து 1990ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக நோயாளிகளிடம் பெற்று மருத்துவம் பார்த்து வந்தார். அதுமட்டுமின்றி பணம் இல்லாதவர்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்த்து வந்தார்.

இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் அன்புடன், கருணையுடனும் நடந்து கொண்டதுடன், தன்னிடம் வைத்தியம் பார்க்க வரும் ஏழை எளிய நோயாளிகளிடம் பணம் வாங்குவதை தவிர்த்தும் வந்தார். இவர் `மனிதநேய மருத்துவர்’ என்கிற பெயருக்கு சொந்தக்காரர் ஆனார். நாளடைவில் பட்டுக்கோட்டையின் அடையாளமாகவும் மாறிய இவர் கைராசிக்காரர் என மக்களால் நேசிக்கப்பட்டவர். இவர் தனது வாழ்நாளில் இதுவரை 65,௦௦௦ பேருக்கு பிரசவம் பார்த்துள்ளார்.

கடந்த 1929ம் ஆண்டு பிறந்த மருத்துவர் டி.கே.ரத்தினம் வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகள் வீட்டில் இருந்த நிலையில் நேற்று காலமானார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வாழ்ந்த இந்த உன்னத ஆத்மாவின் மறைவு பேரிழப்பாகும்.

இதையும் படியுங்கள்:
10 ரூபாய் டாக்டர் மரணம்! மக்கள் சோகம்!
10 rupees doctor rathinam pillai

இவரது உடல் இன்று அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், டாக்டர்கள் என பலதரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com