ஜாலியா ஒரு நாள் ஜெயிலுக்கு போகலாம்! - கையில் 500 ரூபாய் இருந்தா மட்டும் போதும்..!

Prison
Prison
Updated on

நம் வீட்டில் பையன்கள் பிடிவாதம் செய்தால் பெரியவர்கள் "நீயெல்லாம் ஜெயிலுக்கு போய் களி தின்னாத்தான் அடங்குவ" என்று சொல்வது உண்டு. தவறு செய்தவர்கள் சிறைத்தண்டனை பெற்று தவறுக்கேற்ப வருடக் கணக்கில் சிறைவாசம் அனுபவிப்பார்கள். தற்போது தவறே செய்யாமல் 500 ரூபாய் தந்தால் போதும் சிறைக்குள் செல்லலாம்.

"ஜெயில் வாழ்க்கை பூமியின் நரகம்" என்று சொல்வார்கள். தவறு செய்தவர்களுக்கு மட்டும் இருக்கும் சிறை இப்போது நல்லவர்களும் வந்து ஒரு நாள் இரவைக் கழித்து சிறை அனுபவம் பெறும் வகையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா சிறை வளாகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கைதிகளின் வாழ்க்கை மற்றும் சிறை துறையின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் வகையில் ஒரு புதிய சிறை அருங்காட்சியகம் சஞ்சல்குடா சிறை வளாகத்தில் (SICA வளாகம்), அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் ஒருநாள் கைதிகளாக வாழ்ந்து சிறை உணவையும் சூழலையும் அனுபவிக்கும் ஃபீல் த ஜெயில் ( Feel The Jail) என்ற தனித்துவமான திட்டமும் இங்கு தொடர உள்ளது . சுமார் 500 ரூபாய் கட்டணத்தில் மக்கள் விரைவில் இந்த அருங்காட்சியகத்தினை மக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சிறை அருங்காட்சியகம் ஏப்ரல் 28 அன்று திறக்கப்பட்டுள்ளது. இங்கு நிஜாம் மற்றும் பிரிட்டிஷ் காலத்து சிறை நிர்வாகம் முதல் தற்போதைய நவீன சீர்திருத்த முறைகள் வரையிலான சிறைத் துறையின் வரலாற்றை காட்சிப்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

கைதிகள் பயன்படுத்திய பழங்காலப் பொருள்களான பழைய சங்கிலிகள், கை விலங்குகள் (shackles), கைவினைப் பொருட்கள் மற்றும் பழைய ஆவணங்கள் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் கைதிகளின் மறுவாழ்வு அல்லது சீர்திருத்தத்திற்கு சிறைத்துறை எடுக்கும் முயற்சிகள், சிறை கைவினைத் தொழில்கள் மற்றும் வேளாண்மை சார்ந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை கவரும் வகையில் இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய சிறப்பம்சமாக பொதுமக்கள் ஒரு நாள் சிறைவாழ்க்கையை அனுபவிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் ரூபாய் 500 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் கைதிகள் போலவே அணிவதற்கு காதி உடைகள், உண்ண கைதிகளுக்குத் தரப்படும் உணவுகள் மற்றும் சிறை வழக்கப்படி காலை 5 மணிக்கு எழுவது, சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்து சிறை அனுபவத்தைப் பெறலாம்.

இந்த சிறைச்சாலை அருங்காட்சியகம் மற்றும் ஒரு நாள் சிறை அனுபவம் ஆகியவற்றின் முன்னோடியாக இந்தியாவின் முதல் பாரம்பரிய சிறை அருங்காட்சியகமாக (Heritage Jail Museum) மாற்றப்பட்ட தெலங்கானாவின் சங்கரெட்டியில் உள்ள 220 ஆண்டுகளுக்கும் பழமையான, நிஜாம் காலத்தில் (1796) கட்டப்பட்ட பழைய மாவட்டச் சிறை உள்ளது குறிப்பிடத்தக்கது. .இங்கும் ஒரு நாள் சிறை அனுபவத்தில் தங்கும் நபர்களுக்கு காதி உடைகள், எவர்சில்வர் தட்டு, கிண்ணம் வழங்கப்பட்டு, காலை 6 மணிக்கு எழுப்புதல், அணிவகுப்பு, சிறை உணவு, 6 மணிக்கு இரவு உணவு, 9 மணிக்கு 'லைட்ஸ் அவுட்' என நிஜ கைதிகளைப் போன்றே நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

தவறுகளைப் பற்றிய குற்ற உணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சிறை சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் முன்னிட்டு இந்த ஒரு நாள் சிறை அனுபவம் ஏற்படுத்தப்பட்டாலும் வித்தியாசமான அனுபவத்தை பெற விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாக மட்டுமல்ல புது அனுபவமாகவும் அமையும் என்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
இந்த வாரம் வெளியாகும் 4 திரைப்படங்கள்! - 'கர' முதல் 'சுயம்பு' வரை.. உங்கள் சாய்ஸ் எது?
Prison
logo
Kalki Online
kalkionline.com