

கடந்த ஒரு மாதமாக மேற்காசியாவில் நடைபெற்று வரும் போரால், ஏற்கனவே கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போர் விரைவாக முடிவுக்கு வரவில்லை என்றால், உலக நாடுகள் தீவிரமான எதிர்வினையை சந்திக்க நேரிடும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகையால் போரை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஐநா வலியுறுத்தியுள்ளது.
ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களின் விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் போரை முடிவுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்
கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஈரான், அமெரிக்கா தோல்வியை ஏற்காமல், ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தை என தம்பட்டம் அடித்து வருவதாக கிண்டல் செய்துள்ளது. அமெரிக்கா அவர்களுக்குள்ளாகவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஈரான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அராச்சி கூறுகையில், “நிபந்தனையின்றி ஈரானை சரணடைய சொன்ன அமெரிக்கா, தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் என சொல்வது தோல்வியை ஒப்புக் கொள்வதற்கு சமம். போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளியும், சேதங்களுக்கு இழப்பீடும் அமெரிக்கா வழங்க வேண்டும். எதிரி நாடுகளுக்கு ஹார்மூஸ் நீரிணை நிச்சயமாக திறக்கப்படாது. அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஈரானின் மின் கட்டமைப்புகளை தாக்காமல், கடந்த மூன்று நாட்களாக அமெரிக்கா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அதிபர் டிரம்ப் சற்றுமுன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் எதார்த்தத்தை அறிந்து கொள்ளத் தவறினால், ஈரான் மீது இதுவரை இல்லாத அளவிற்கு மிக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை என சொல்லி வரும் நிலையில், ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்திருப்பது போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால், ஈராக் போரில் ஏற்பட்ட பேரழிவு போலவே மீண்டும் ஏற்படும் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பா உள்பட உலகம் முழுவதும் இது பெரும் பாதிப்பை உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐநாவை தொடர்ந்து ஸ்பெயின் அதிபரும் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது