இனிப் பொது இடங்களில் குப்பைக் கொட்டினால், 500 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று புதுச்சேரி உள்ளாட்சித்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியின் அழகையும் சுகாதாரத்தையும் பாதுகாக்க நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள், உள்ளாட்சித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் சாலையோர குப்பைகளை அகற்றி வருகின்றனர்.
புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அந்த கட்டடங்களின் கழிவுகளை பொறுப்பற்ற முறையில் சாலையோரங்களிலேயே தேக்கி வைக்கின்றனர். இதனால், வாகன ஓட்டிகளுக்கும் நடந்து செல்வோருக்கும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. சில விபத்துக்களும் நடக்கின்றன. இதனையடுத்து அந்த செய்திக்குறிப்பில் சில வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது பொதுமக்கள் தங்களது கட்டட கழிவுகள், பழைய பொருட்கள் ஆகியவற்றை சாலையோரங்களில் போடக்கூடாது.
சாலையோர உணவுக் கடைகளின் கழிவுகளை குப்பைத் தொட்டியில் சேகரித்து, அதனைக் குப்பை அகற்றும் ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இது மற்ற வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும். பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்காத வண்ணம் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். அதனை மீறுவோர் மீது நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து விதிகளின்படி அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, பொது இடங்களில் குப்பைக் கொட்டும் பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் ரூ500 முதல் ரூ1000 வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல் கட்டுமான பொருட்களையோ கழிவுகளையோ வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் முன் அல்லது பொதுவெளியில் கொட்டுபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதனை கண்காணிக்க அனைத்து முக்கிய தெருக்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்படும். வீதிகளில் குப்பைக் கொட்டுபவரை கேமராக்கள் மூலம் அடையாளம் கண்டுக்கொண்டு அபராதம் விதிக்கப்படும். ஒருவேளை அபராதம் விதித்தும் எச்சரிக்கையை மதிக்காமல் மீண்டும் அந்தத் தவறை செய்தால், அவர்கள் மீது பிரிவு எண் 133 குற்றவியல் சட்டத்தின்கீழ் வழக்குத் தொடரப்படும் என்று எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.