கிணற்றில் விழுந்தவரை பேய் என்று நினைத்த மக்கள்… அப்றம் என்னாச்சு தெரியுமா?
கிணற்றில் தவறி விழுந்தவர் உதவிகேட்டு கத்தும்போது அவரை பேய் என்று நினைத்துக்கொண்டு மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனையடுத்து மூன்று நாட்கள் கழித்து அவரை மீட்டுள்ளனர்.
கடவுள் நம்பிக்கைக்கு நேரெதிராக இருக்கும் ஒன்றுதான் மூட நம்பிக்கை. அதுவும் மூட நம்பிக்கை என்பது பேய்கள் பற்றிய ஒன்றாகவும் இருக்கலாம். பேய்கள் உண்மையிலேயே இருக்கிறதா என்பது இன்றும் தெரியவில்லை. ஆனால், இந்த நம்பிக்கையால் பலர் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதில் ஒன்றுதான் சீனாவில் நடந்த ஒரு சம்பவம். சீனாவை சேர்ந்த Liu Chuanyi என்ற 22 வயது இளைஞர் தாய்லாந்து – மியான்மர் எல்லை அருகே சுற்றித்திரிந்தபோது புதர்களால் சூழப்பட்டிருந்த கிணறு ஒன்றில் தவறுதலாக விழுந்துவிட்டார்.
இதனையடுத்து அவர் உதவிக்காக கத்திக்கொண்டே இருந்திருக்கிறார். ஆனால், அந்த பகுதியில் உள்ளவர்கள் கிணறு உள்ள திசையின் பக்கம் எதோ சத்தம் வருகிறது என்றும், ஒருவேளை பேய் சத்தமாக இருக்கும் என்றும் அந்த குரல் வந்தப் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.
மேலும் கிணற்றில் உள்ளவர் உதவிக்கேட்டு கத்திக்கொண்டே இருந்திருக்கிறார். இப்படியே மூன்று நாட்கள் சென்றது. இதனையடுத்து மீட்புக் குழுவினர் அவரை கிணற்றிலிருந்து வெளியே எடுத்து காப்பாற்றியுள்ளனர். மூன்று நாட்கள் உணவு நீர் இன்றி அடிபட்ட காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார்.
அவர் யார் என்று விசாரணை நடந்து வந்த நிலையில், அவர் ஒரு சீன நாட்டவர் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும் அந்த பகுதி மக்களுக்கு அவர் பேசிய மொழி புரியவில்லை என்பதால், அது ஒரு பேய்களின் மந்திரம் என்று கிராமம் முழுவதும் பரவியிருக்கிறது.
இந்த பேய்க்கு பயந்து அந்த மக்கள் வீட்டைவிட்டு வரவே இல்லையாம். மேலும் கிணற்றில் விழுந்த அந்த நபர் வழித் தேடிக்கொண்டு காட்டு பகுதிக்குள் சுற்றுத் திரிந்ததாகவும், அப்போது தெரியாமல் அந்த புதர்கள் மண்டிக் கிடந்த இடத்தில் இருந்த கிணற்றில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மக்கள் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் மூன்று நாட்கள் அவர் வாழ்க்கையோடு போராடி இருந்ததைக் குறிப்பிட்டு பாராட்டியும் உள்ளனர். இதனையடுத்து அந்த கிணற்றை மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.