சென்னையில் குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தது தெரியாமல் அதனை அருந்தி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீரை விநியோகம் செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். குடிநீரில் கழிவு நீர் கலந்ததுக்கூட தெரியாமல் விநியோகம் செய்திருக்கின்றனர். இதனால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் அடுத்த பல்லாவரம் கன்டோன்மண்ட் பகுதியில், நேற்றிரவு மாநகராட்சி விநியோகிக்கும் குடிநீரை அருந்திய 37 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பல்லாவரம் மேட்டுத்தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு வாந்தி, மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
குரோம்பேட்டை மருத்துவமனையில் 18 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் உறவினர் வீட்டுக்கு வந்தவர் மற்றும் முதியவர் உட்பட மூன்று பேர் இறந்துள்ளனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியதாக சொல்லப்படுகிறது. மேலும் ஒருவர் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதேபோல் இரண்டு பேர் அவர்களாகவே வேறு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
இதற்கு பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அதாவது எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி, “குடிநீரை மிகுந்த கவனத்துடன் விநியோகிக்க வேண்டியது அரசின் கடமை.
புயல் கரையை கடந்ததும், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் இடையே எவ்வித கலப்பும் இல்லை என்பதை அரசு உறுதி செய்திருக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, “இதே போன்று, மக்கள் நலன் குறித்து சிறிதும் அக்கறை இன்றிச் செயல்படும் திமுகவால், நாள்தோறும் உயிரிழப்பு ஏற்படுகிறது.” என்று பேசியுள்ளார்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன், “உயிரிழந்த 2 பேரின் உடற்கூராய்வு முடிவுகள் மற்றும் குடிநீர் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் பெறப்பட்ட பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும்” என்று பேசியிருக்கிறார்.
மேலும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து விசாரித்திருக்கிறார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இரண்டு பேரின் உயிரிழப்பிற்கு குடிநீர் காரணம் இல்லை என்று விளக்கம் அளித்தார்.
இந்த உயிரிழப்புகளுக்கு என்ன காரணம் என்பது விரைவில் தெரியவரும்.