திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்!

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்!
Published on

பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது. போட்டியைக் காண ராகுல் காந்தி வர இருக்கிறார். இதன் மூலம் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யமும் இணைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் கமலஹாசன் பிப்ரவரி 2018 ம் ஆண்டு மதுரைஒத்தக்கடை மைதானத்தில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் தம் கட்சிப் பெயர் மற்றும் கொடியை ஏற்றி மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார்.

அதன் பின் நடந்த 2019 பாராளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்ட மன்றத் தேர்தலை தனியே சந்தித்தார்.  

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைக்க திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பினார் என்ற தகவல் பரவியது.  கூட்டணி குறித்து உதயநிதி ஸ்டாலினும் கமல்ஹாசனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.   ஆனால் அந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வரவில்லை என்ற தகவல் பரவியது.

அதன் பின்னர் கமல் நடித்த ‘விக்ரம்’ திரைப்பட விநியோகத்தின் மூலமாக உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்த்தார் கமல்ஹாசன்.  அப்போது உதயநிதி ஸ்டாலினுடன் ஏற்பட்ட பழக்கத்தினால்  அரசியலிலும் கூட்டணி வைக்க முடிவு செய்திருக்கிறார் கமல் என்ற தகவல் பரவி வந்தன.  அதை உறுதி செய்யும் விதமாக , அதற்கு முன்னோட்டமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையில் கமல்ஹாசன் டெல்லியில் பங்கேற்றார். 

அதன் பின்னர் ராகுல் காந்தியுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த சந்திப்பின்போது அவர்கள் உரையாடியது வீடியோவாகவும் வெளியிடப்பட்டது.   அப்போது திமுக -காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் வந்துவிட்டார் என்ற பேச்சு எழுந்தது.  அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக சென்னையில் ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் உடன் அமர இருக்கிறார் கமல்ஹாசன்.

சென்னையில் பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் சார்பில் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  

அப்போது பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ்  மாநாடு நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டுவிட்டு, பிறகு தமிழகம் வந்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கிறேன் என்று உறுதி அளித்திருக்கிறார் ராகுல் காந்தி.

அதே நேரம் அந்த ஜல்லிக்கட்டு விழாவுக்கு தமிழக முதல்வர்  ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுங்கள் என்று மக்கள் நீதி மய்யத்தினருக்கு சொல்லி இருக்கிறார் ராகுல் காந்தி. இதன் மூலம் ஒரே மேடையில் ராகுல் காந்தி, ஸ்டாலின் உடன் கமல்ஹாசனும் அமர இருக்கிறார்.

 வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைகிறது என்பது இதன் மூலம் உறுதியாகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com