

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான் கீழக்கணவாய் . இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளைக் கொண்டுள்ள இந்த கிரிமம் பெரம்பலூர் - செட்டிகுளம் சாலையில், பெரம்பலூரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இக்கிராமத்தில் அரசு கல்வி நிறுவனமான அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி (Government Polytechnic College):இயங்கி வருகிறது. அந்த கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சிகளை பயின்று வருகின்றனர். சமீபத்தில் இங்கு புதிய திறன் மேம்பாட்டு கட்டடங்களும் திறக்கப்பட்டுள்ளது சிறப்பு.
பெரம்பலூர் மற்றும் செட்டிகுளம் இடையே அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு செட்டிகுளம் பிரதான சாலையின் வழியாக எளிதில் செல்லக்கூடிய போக்குவரத்து வசதியுடன் இயற்கை சூழல் மிகுந்த இந்த கிராமத்தில் குரங்குகள் அதிகம் வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இங்கு உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலும் ஏகப்பட்ட குரங்குகள் வந்ததாகவும் அவற்றின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பயிலும் மாணவ மாணவிகளும் கவனம் சிதறி பாதிப்பு அடைந்ததாகவும் கல்லூரி நிர்வாகம் குரங்குகளை பிடிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
இதையடுத்து நிர்வாகத்தின் ஏற்பாட்டில் குரங்குகளை பிடிக்க அனுபவமுள்ள குரங்கு பிடிக்கும் 2 நபர்கள் கல்லூரிக்கு வந்துள்ளனர். அவர்கள் குரங்குகளை துன்புறுத்தி பிடித்ததாக கூறப்படுகிறது. குரங்கினை துன்புறுத்தி பிடித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இந்த சம்பவம் அந்த மாவட்டத்தின் வனத்துறை காவலர்கள் கவனத்திற்கு சென்றது.
இதையடுத்து பெரம்பலூர் வனத்துறையினர் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் குரங்கினை துன்புறுத்தி பிடித்த விவகாரம் குறித்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மற்றும் அங்கு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து வனத்துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டகுரங்கு பிடிப்பாளர்களான புதுக்கோட்டை மாவட்டம் மாதிரிப்பட்டியை சேர்ந்த 20 வயது ஜீவா மற்றும் திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை அடிவாரத்தை சேர்ந்த 70 வயதான சின்னத்துரை ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இவர்கள் குரங்குகளை பிடித்த போது வீடியோ எடுத்து வெளியிட்ட காவலாளிக்கும் ரூ.10,000 அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட வனத்துறை அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நடிகர் விக்ரம் அரிய வகை லார் கிப்பான் குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம் வைரலாகி அதன் மீதான வனத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது . குறிப்பாக அரிய வகை குரங்கு விவகாரத்தை அடுத்து ஈரோட்டில் உள்ள பண்ணையில் வனத்துறை மற்றும் வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு நடத்திய சோதனையில் ஆப்பிரிக்கா பூனைகள் உள்ளிட்ட பல வெளிநாட்டு விலங்குகள் ஆவணங்களின்றி வளர்க்கப்பட்டது தெரியவந்ததாகவும் பெண் குரங்கு ஒன்று இறந்த தகவலை மறைத்தது தொடர்பாகவும் விசாரணை தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் குரங்கின் உரிமையாளர் கேசவநாதனிடம் உள்ள இரண்டு லார் கிப்பான் குரங்குகளையும் நீதிமன்ற அனுமதி பெற்று பறிமுதல் செய்யவும் வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கேசவநாதன் மீது மன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலே சொன்ன செய்தியிலும் நடிகர் விக்ரம் தொடர்பான செய்தியிலும் முக்கியமானதாக இருக்கிறது குரங்கு வகைகளே. எனினும் வாயற்ற ஜீவன்களான எந்த விலங்காக இருந்தாலும் விதியை மீறி அவற்றை துன்பப் படுத்தினால் நிச்சயம் சட்டம் பாயும்.
இந்தியாவில் விலங்குகள் மீதான கொடுமைகளைத் தடுக்கவும், அவற்றுக்கு இழைக்கப்படும் தேவையற்ற வலிகளைத் தவிர்க்கவும் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960 (Prevention of Cruelty to Animals Act, 1960). இச்சட்டம் விலங்குகளின் நலனைப் பாதுகாப்பதையும், அவற்றுக்கு எதிராகச் செய்யும் தீங்குகளுக்குத் தண்டனை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறிப்பாக விலங்குகளுக்கு மனிதர்களால் ஏற்படும் தேவையற்ற துன்பத்தைத் தடுத்தல் இதன் முக்கிய நோக்கமாகும். விலங்குகளைத் முறையாகப் பராமரிக்காமல் கைவிடுவது அல்லது துன்புறுத்துவதைத் தண்டித்தல் போன்றவைகள் இந்த சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகிறது.
சமீபகாலமாக நாய்கள் மூலம் மனிதர்களுக்கு ஆபத்துகள் நேர்வதை அடிக்கடி காண்கிறோம். அதே நேரத்தில் காட்டில் சுதந்திரமாக இருக்க வேண்டிய வனவிலங்குகளை மனிதர்கள் துன்புறுத்துவதை கைவிட வேண்டும் என்பதே விலங்குநல ஆர்வலர்கள் கருத்து.