சொத்துக்காக மட்டுமே பாசமா? பெற்றோரை கவனிக்காத மகனுக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

சொத்து பத்திரத்தில் குறிப்பிட்டால் தான் பெற்றோரை பராமரிக்க முடியும் என்று கூறுவது ஏற்புடையதல்ல என மதுரை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
madurai high court
madurai high courtAI Image
Updated on

சொத்து பத்திரத்தில் குறிப்பிட்டால் தான் பெற்றோரை பராமரிக்க முடியும் என்று கூறுவது ஏற்புடையதல்ல என மதுரை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.

இன்றைய வேகமான மற்றும் இயந்திரத்தனமான வாழ்க்கைப் சூழலில், தங்களை ஆளாக்கிய வயதான பெற்றோரைப் புறக்கணிக்கும் போக்கு சமூகத்தில் அதிகரித்து வருகிறது. மேலும் பெற்றோரிடம் இருந்து சொத்துகளை மட்டும் எழுதி வாங்கிக்கொண்டு, அவர்களை வீதிக்கு விரட்டும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இதனால் வாழ்நாள் முழுவதும் உழைத்த பெற்றோர், கடைசி காலத்தில் அன்பும் ஆதரவும் இன்றி தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

மனுதாரர் சொத்து எழுதிக் கொடுத்தால் மட்டுமே பெற்றோரைப் பராமரிப்பேன் என்று கூறுவது ஏற்புடையதல்ல என்றும், பெற்றோரைக் கவனிப்பது பிள்ளைகளின் அடிப்படைக் கடமை என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. சொத்து கைமாறாவிட்டாலும் பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என நீதிமன்றம் கண்டித்துள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த வீரம்மாள் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், என் 4-வது மகன் ராம்குமாருக்கு என் சொத்தை செட்டில்மெண்ட் மூலம் பத்திரம் எழுதி கொடுத்தேன். ஆனால் அவர் என்னை முறையாக கவனித்து கொள்ளவில்லை. இதுகுறித்து மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி ராதநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அளித்தேன். அதன்பேரில் வீரம்மாள், ராம்குமாருக்கு எழுதிக்கொடுத்த பத்திரத்தை வருவாய் அதிகாரி ரத்து செய்தார்.

இதை எதிர்த்து ராம்குமார் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, என்னை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரின் பத்திரம் எழுதி கொடுக்கப்படவில்லை. அதனால் ராம்குமார் தனது தாயாரை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனக் கூறி தனிநீதிபதி செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்தது செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.

இதை எதிர்த்து வீரம்மாள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், மகன் மீதான அன்பு, பாசம் காரணமாகவே அந்த சொத்தை அவருக்கு எழுதி வைத்தேன். இதன்மூலம் அவர் என்னை முறையாக கவனித்துக்கொள்வார் எனவும் நம்பினேன். மூத்த குடிமகன், தனது சொத்தை அன்பளிப்பாக (சொத்து பத்திரம்) வழங்கும்போது அந்த மூத்த குடிமகனை கவனித்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை கட்டாயமாக சேர்க்கப்படுவதில்லை. இத்தகைய பரிமாற்றங்கள் எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அன்பு மற்றும் பாசத்தின் காரணமாகவே செய்யப்படுகின்றன. இந்த விவகாரத்தில் தனிநீதிபதி வழங்கிய தீர்ப்பு ஏற்புடையதல். அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவி கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரார் வக்கீல் ஆர்.வெங்கடேஷ் ஆஜராகி இந்த விவகாரத்தை பொறுத்தவரை மூத்த குடிமக்கள் தங்களுக்கு வேண்டியவர்கள் தங்களை பராமரித்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் சொத்துக்களை தானமாக வழங்குகிறார்கள். இதுதொடர்பான நிபந்தனையை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க தேவையில்லை என்பதை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தெரிவித்து இருக்கிறது.

தனிமையில் மூத்த குடிமக்கள்|சொத்து பத்திரம்
தனிமையில் மூத்த குடிமக்கள்|சொத்து பத்திரம்AI Image

அந்த உத்தரவுக்கு எதிராக தனிநீதிபதி உத்தரவு அமைந்து உள்ளது. எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

இதையடுத்து நீதிபதிகள் ‘பெற்றோர்கள் அன்பு மற்றும் பாசத்தின் காரணமாகவே சொத்தை எழுதி வைக்கின்றனர்; அதில் பராமரிப்பு நிபந்தனையை வெளிப்படையாகக் குறிப்பிடத் தேவையில்லை’ என நீதிபதிகள் சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் முதியவர்கள் தங்கள் பாசத்துக்கு உரிய வாரிசுகளுக்கு சொத்துக்களை நிபந்தனை இன்றி கொடுக்கின்றனர். அவர்களும் அதே அளவு அன்பை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் கொடுக்கிறார்கள். இதனை பத்திரத்தில் நிபந்தனையாக தெரிவிக்க தேவையில்லை. ஆனால் பத்திரத்தில் குறிப்பட்டால்தான் பெற்றோரை பராமரிக்க முடியும் என கூறுவது ஏற்புடையதல்ல என அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர் இந்த விவகாரத்தில் தனிநீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தனர்.

பொதுவாக பெற்றோர் தங்களை இறுதி காலத்தில் கஷ்டப்பட வைக்காமல் நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் இதுபோல தாங்கள் சம்பாதித்த சொத்துகளை மகனுக்கோ, மகளுக்கோ இஷ்டதானமாக, தானப் பத்திரமாக எழுதி கொடுக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
லட்சங்களில் சம்பளம்... அனாதையாகும் பெற்றோர்! அப்போ தாய் மண்…?
madurai high court

ஒருவேளை அவர்களின் நிபந்ததனையற்ற இந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றால், அதற்காக அந்தப் பத்திரத்தை ரத்து செய்யக் கோரி புகார் அளிக்கவும் அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. இதற்காக முன்கூட்டியே அந்த பத்திரத்தில் நிபந்தனைகளை எழுத வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.

அதேபோல குழந்தைகள் மீது வைத்துள்ள அன்பு, பாசத்தையும் பத்திரம் வாயிலாக வெளிக்காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. மூத்த குடிமக்கள் கண்ணியமாக வாழ சட்டம் வழிவகை செய்துள்ளது. பிள்ளைகள் கவனிக்காவிட்டால் அவர்களுக்கு பெற்றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்யலாம். அந்த தான பத்திரத்தை செல்லாது என்று அறிவிக்க 2007 சட்டத்தின் பிரிவு 23 [பெற்றோர் பராமரிப்பு, நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள்] சட்டத்தில் இடம் இருக்கிறது.

சொத்துகளை எழுதி வைத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான தேவைகளை சொத்துகளை பெற்றவர் செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதி கொடுத்தது செல்லாது என்று அறிவிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

இதையும் படியுங்கள்:
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு..! 50 வயது பெண்ணும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற தகுதியானவரே..!
madurai high court

வயது முதிர்ந்த காலத்தில் அவர்களை பாரமாக நினைக்காமல், அவர்களின் அனுபவத்தையும் தியாகத்தையும் மதித்து கண்ணியமாக நடத்துவதே ஒரு நல்ல சமூகத்திற்கு அடையாளம். நாம் நம் பெற்றோரை எப்படி நடத்துகிறோமோ, அதைப்பார்த்தே நம் குழந்தைகளும் நாளை நம்மை நடத்துவார்கள் என்பதை உணர்தல் அவசியம்.

logo
Kalki Online
kalkionline.com