அமேசான் மழைக்காடுகளில் கண்டறியப்பட்ட ஒரு அரிய வகை காளான், ஆக்ஸிஜன் இல்லாமலேயே பிளாஸ்டிக்கை உண்டு வாழும் திறன் கொண்டது என்பதை கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
'பெஸ்டலோடியோப்சிஸ் மைக்ரோஸ்போரா' (Pestalotiopsis microspora) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் காளான், பாலியூரித்தேன் (Polyurethane) எனப்படும் பிளாஸ்டிக் வகையைச் சிதைக்கும் தன்மை கொண்டது. இந்த பாலியூரித்தேன் என்பது பல்வேறு பொருட்களான காலணிகள், இன்சுலேஷன் பொருட்கள், வாகன பாகங்கள் என பலவற்றிலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை பிளாஸ்டிக் ஆகும்.
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, 2011 ஆம் ஆண்டு முதல் ஈக்வடாரின் அமேசான் மழைக்காடுகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வின்போதுதான் இந்த அறிய வகை காளானைக் கண்டுபிடித்தனர். இக்காளானின் தனித்தன்மை என்னவென்றால், இது ஆக்ஸிஜன் இருக்கும் சூழலிலும், இல்லாத சூழலிலும் வாழும் திறன் கொண்டது. அதாவது, நிலப்பரப்பில் உள்ள குப்பைக் கிடங்குகள் போன்ற ஆக்ஸிஜன் குறைவாக உள்ள இடங்களில் வாழக்கூடியது. கடலின் ஆழத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சிதைக்க இது ஒரு சாத்தியமான தீர்வாக அமையும்.
இந்தக் காளான், பிளாஸ்டிக்கை தனது ஒரே கார்பன் ஆதாரமாகப் பயன்படுத்துகிறது. அது பிளாஸ்டிக்கை சிறிய துகள்களாக உடைத்து, பின்னர் அதை தனக்குத் தேவையான ஆற்றலாக மாற்றிக் கொள்கிறது. சோதனை ரீதியாக, இந்த காளான் சில வாரங்களிலேயே பிளாஸ்டிக்கை கணிசமாக சிதைக்கத் தொடங்குவதைக் கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்.
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், நிலத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் நிலையில், இந்தக் காளானின் கண்டுபிடிப்பு ஒரு புதிய நம்பிக்கையையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்த வகை காளான் அழியும் நிலையில் உள்ளன. இது வருத்தத்திற்குறிய விஷயமாக கருதப்படுகிறது.
மேலும் இந்த ஆய்வின் மூலம் 17 வகையான பாக்ட்ரீயாக்களையும், ப்ளாஸ்டிக் உண்ணும் ஒண்பது பூஞ்சைகளையும் கண்டுபிடித்துள்ளனர்.
அமேசான் காடுகளில் மட்டுமின்றி, குஜராத்தில் பிராணாவில் ஆராய்ச்சி குழு ஒன்று ஒரு சிறிய ப்ளாஸ்டிக் உண்ணும் பாக்ட்ரீயாவை கண்டுபிடித்திருக்கின்றனர். அதேபோல், 2017ம் ஆண்டில் பாகிஸ்தான் ஒரு கழிவுகள் அகற்றும் இடத்தில் பாக்ட்ரீயாவை உண்ணும் ஒரு காளான் வகையை கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.