
இரண்டு பேரும் கிசு-கிசு -ன்னு ரொம்ப நேரமா அங்க நின்னு பேசிக்கிறாங்களே!. என்னவா இருக்கும். என்னப்பத்தி பேசறாங்களோ? மனசுக்குள் நெருடல்.
அங்க என்ன காதுல கிசு-கிசுப்பு..? இங்க வந்து பேசினா, நாங்களும் கேப்போமில்ல!"
மேற்கூறியபடி, கிசு-கிசு பேசாதவர்களே உலகில் கிடையாது. எப்போதாவது, யாரிடமாவது, வாழ்வில் ஒரு தடவையாவது கிசு-கிசு பேசித்தான் இருப்போம். கிசு-கிசு பேசுவது என்பது எதிர்மறையான விஷயம். சிலருக்கு, கிசு-கிசு பேசுவது என்பது அல்வா சாப்பிடுவது மாதிரி.
நாம் பேசும் சாதாரண கிசு-கிசுக்கள் கூட, பல பெரிய பிரச்னைகளை சில சமயத்தில் ஏற்படுத்தி, சண்டை, தற்கொலை மற்றும் கொலை செய்யும் அளவிற்கு தூண்டிவிடும். திரை உலகில், கிசு-கிசு ஏராளம்.
கிசு-கிசுக்கள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!
கல்யாண வீடு:
"அங்க பாரு! அந்த விஜயா மாமி, நிறைய நகை போட்டுக்கிட்டு அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்காங்களே! அவங்க போட்டு இருக்கற நகை தங்கம் கிடையாது. எல்லாம் கோல்ட் கவரிங்! "உனக்குத் தெரியுமா? கமலா காதில் விமலா கிசு-கிசுத்தாள்.
"அப்படியா? நா நிஜத் தங்கம்னு நினைச்சேனே!"
"இதப்பாரு கமலா! நான் சொன்னேன்னு யாருகிட்டயும் சொல்லிடாதே. பெரிய பிரச்னை ஆயிடும். விஜயா மாமி பெரிய சண்டைக்காரி.
"கவலப்படாதே விமலா" நான் யார்கிட்டச் சொல்லப் போறேன் எனக் கூறும் கமலா, மெதுவாக பல்லவியிடம் சென்று இதே விஷயத்தை கிசு-கிசுப்பாள். இப்படியாகப் பரவும் விஜயா மாமியின் கோல்ட் கவரிங் நகை விஷயம்.
அலுவலகம்:
"டேய் மாது! உனக்கு விஷயம் தெரியுமா? இந்த கம்பெனிக்கு மாடா உழைக்கற சுரேஷுக்கு ப்ரமோஷனைக் கொடுக்காம, நேத்து வந்த நிர்மலாவுக்கு ப்ரமோஷனை பாஸ் கொடுக்கறார்னா ஏதோ விஷயம் இருக்கு.!" கோபால் கூறவும்,
"என்னவா இருக்கும்? கேட்டான் ராம்.
"போடா மக்கு! பாஸ்தான் ஜொள்ளு பார்ட்டி ஆச்சே! உனக்கு தெரியாதா..?" கிசு-கிசுத்தான் கோபால்.
"பாஸ் ஜொள்ளுப் பார்ட்டியா? இவ்வளவு நாளா எனக்குத் தெரியாதே! "
"ராம்! யார்கிட்டயாவது நான் சொன்னேன்னு உளறிடாதே. பாஸுக்குத் தெரிஞ்சா, என் சீட்டை கிழிச்சுடுவார்!"
"நான் எதுக்குடா சொல்லப்போறேன்." என்று கூறும் ராம், லஞ்ச் டயத்தில், ஃப்ரெண்ட் கிருஷ் காதில் கிசு-கிசுக்க, விஷயம் அலுவலகம் முழுவதும் தீயாய் பரவியது. கோபால் சீட்டு கிழிஞ்சது.
கிசு- கிசு பேசுவதால் நன்மைகளும் ஏற்படும். எவ்வாறு?
ஒருவர், யாரைப் பற்றியாவது நம்மிடம் கிசு-கிசு பேசுகையில், அவரது நடத்தை மற்றும் பேசும் தன்மை தெரியவரும். அவர்களுடன் ஒத்துழைக்கலாமா? இல்லையா? என அறிந்து அத்தகைய நபரை வடிகட்ட உதவும் கிசு-கிசு.
உங்களுக்குப் பிடிக்காத ஒருவரைப் பற்றியோ அல்லது கிடைக்காத பதவி உயர்வு குறித்தோ பிறரிடம் கிசு-கிசுப்பாக மனதார பகிர்கையில், மன அழுத்தம் குறைந்து சாதரணமாக உணர வைக்கும்.
அறியாமையில் ஒருவர் தவறு செய்தது குறித்து கேட்கப்படும் கிசு-கிசு, உங்களை சீர்திருத்தி, சொந்த நடத்தையில் நல்லபடியாக வேலை செய்ய உதவும்.
அநேகர், தங்கள் கவலைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகையில், தங்களிடம் ஆதரவாக பேசி, உறுதியளிப்பவர்களிடம் கவலைகளை கிசு-கிசுக்கின்றர். இத்தகைய கிசு-கிசுப்பு, மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
அலுவலகத்தில், அடுத்தவர் செய்யும் குறிப்பிட்ட வேலை பற்றி பிறர் கிசு-கிசுக்கையில் எதேச்சையாக கேட்க நேரிடலாம். அந்த வேலை எதிர்பாராத விதத்தில் நம்மிடம் வருகையில், விழிப்புணர்வுடன் சரியாக செயல்பட கேட்ட கிசு-கிசு உதவும்.
தேவையில்லாத கிசு-கிசுப்புக்களை வடிகட்டி, தேவையான கிசு-கிசுப்புக்களை எடுத்துக்கொண்டால், "கிசு-கிசுப்பும்" நன்மை பயக்கும். சரிதானே!