குறைதீர்வு கூட்டத்தில் கிராம மக்கள் மனு!

Village People
Village People
Published on

நாட்டறம்பள்ளி அருகே ஜல்லி தொழிற்சாலை, கல்குவாரி அமைக்க தடை விதிக்க வேண்டும் - குறைதீர்வு கூட்டத்தில் கிராம மக்கள் மனு:

நாட்டறம்பள்ளி அருகே ஜல்லி தொழிற்சாலை, கல்குவாரி அமைக்க தடை விதிக்க வேண்டும் என மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனித்துணை கலெக்டர் பெலிக்ஸ்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடிநீர் வசதி, சாலைவசதி, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 345 மனுக்கள் கொடுத்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான சக்கர நாற்காலி, ஊன்றுகோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார்.

நாட்டறம்பள்ளி அருகே மல்லபள்ளி ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் அளித்துள்ள மனுவில்,

எங்கள் பகுதியில் அக்ரகாரம் மலைஅடிவாரத்தில் தனியார் நிலத்தில் ஜல்லி தொழிற்சாலை, கல்குவாரி அமைக்க பணிகள் நடக்கிறது. இந்த ஜல்லி தொழிற்சாலை, கல்குவாரியால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர்மட்டம், விவசாயம் ஆகியவை பாதிக்கப்படும். மேலும் எம்சாண்ட் மணல் அரைக்கும்போது ஏற்படும் தூசுக்களால் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் ஜல்லி தொழிற்சாலை, கல்குவாரி அமைக்க தடைவிதிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

வாணியம்பாடி அருகே நெக்குத்தி ஊராட்சி மோதக்குட்டை ராஜுவ்காந்தி நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில்,

எங்கள் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு தார்சாலை, மின்விளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே இவற்றை ஏற்படுத்தி தரவேண்டும் என கூறியிருந்தனர்.

திருப்பத்தூர் அருகே செவ்வாத்தூரை சேர்ந்த மூர்த்தி என்பவர் அளித்துள்ள மனுவில்,

திருப்பத்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வந்த டி34 பஸ்சை திருப்பத்தூரில் இருந்து சாமல்பட்டி வரை மீண்டும் இயக்கினால் இந்த வழித்தடங்களில் உள்ள ஊர்களை சேர்ந்த பொதுமக்களும், மாணவ& மாணவிகளும் மிகவும் பயனடைவர் என கூறியிருந்தார்.

குரும்பேரி அருகே களர்பதி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில்,

விஷமங்கலத்தில் இருந்து அங்கநாதவலசை சாலையில் கோடியூரில் இருந்து எம்.ஜி.ஆர். நகர் வரையிலும், களர்பதி கிராத்தில் இருந்து மாம்பாக்கம் செல்லும் சாலையில் சாயபு வட்டத்தில் பகுதியிலும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலைகளை சீரமைக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் பொதுநலச்சங்கத்தினர் கொடுத்துள்ள மனுவில்,

திருப்பத்தூர் அருகே ஆதியூர் ஏரிக்கரையில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள், மருத்துவ உபகரணங்கள் திருமண மண்டபங்களில் பயன்படுத்தும் உணவு கழிவுகள் உள்ளிட்டவற்றால் ஏரி தண்ணீரானது மாசுப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்பை கொட்டப்படுவதை தடுத்து அந்த பகுதியில் தார்சாலை அமைத்து தர வேண்டும். மேலும் திருப்பத்தூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பகுதி- 2-ல் உள்ள குடிநீர் தொட்டியை சுற்றி முட்புதர்கள் படர்ந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் சிலர் குடிநீர் தொட்டி மீது ஏறி மது அருந்துகின்றனர். எனவே அதனை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும் என கூறியிருந்தனர்.

இதையும் படியுங்கள்:
சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி - கலெக்டர் அலுவலகத்திற்கு படை எடுத்த பெண்கள்!
Village People

தர்ணாவில் ஈடுபட்ட பெண்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த நாட்டறம்பள்ளி அருகே அம்மணாங்கோவிலை சேர்ந்த சோனியா (வயது 34) என்பவர் திடீரென கலெக்டர் அலுவலக கூட்டரங்கின் நுழைவு வாசல் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைபார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

"நான் தற்போது பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகிறேன். எனது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து எனது கணவரின் உறவினர் பூர்விக சொத்தை தனது பெயருக்கு பட்டா செய்து கொண்டார். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை."... எனவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார். இதையடுத்து போலீசார் அவரை சமாதானம் செய்து கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர்.                                                   

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com