சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி - கலெக்டர் அலுவலகத்திற்கு படை எடுத்த பெண்கள்!

Tirupattur District Collectorate
Tirupattur District Collectorate
Published on

திருப்பத்தூரில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுவதாக சமூக வலை தளங்களில் பரவிய தகவலை நம்பி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 100க்கணக்கான பெண்கள் நேற்று குவிந்ததால் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. 

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகுதியிருந்தும், கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் ஏராளமான பெண்கள் விடுபட்டுள்ளனர். 

இதையடுத்து, கலைஞர் உரிமை தொகை பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் 3 நாட்களுக்கு நடைபெறும் என்ற பொய்யான தகவல் சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆனது. இதை உண்மை என நம்பிய திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கணக்கான குடும்ப பெண்கள் மனுவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று படையெடுத்தனர்.

திங்கள்கிழமை மக்கள் குறை தீர்வுக்கூட்டத்துக்கு ஏராளமான பொதுமக்கள் மனுவுடன் வந்த நிலையில் அவர்களுடன் கலைஞர் உரிமை தொகை  தொடர்பான சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மனு அளிக்க 100க்கணக்கான பெண்களும் வந்ததால் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் மக்கள் கூட்டத்தால் கலகலத்தது. 

ஆட்சியர் அலுவலக பின்வாசல் முன்பு கையில் மனுவுடன் 300க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர். இதைகண்டதும், அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மக்கள் குறை தீர்வுக்கூட்டத்துக்கு தான் இவ்வளவு பேர் வந்துள்ளார்கள் என நினைத்து அவர்களை தரையில் அமர வைத்தனர். 

காலை 10 மணி முதல் 11 மணி வரை காத்திருந்த குடும்ப பெண்கள் கலைஞர் உரிமை தொகைக்கான சிறப்பு முகாம் இன்று (நேற்று) நடைபெற வில்லை. 

சமூக வலைதளங்களில் பரவி தகவல் வதந்தி என்பதை அறிந்த பெண்கள் ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும் எனக்கூறி ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு தள்ளு- முள்ளு ஏற்பட்டு கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. 

இதையும் படியுங்கள்:
News 5 – (19-08-2024) புதிய திரைப்படத்தில் நடிக்கிறார் சூரி!
Tirupattur District Collectorate

இது குறித்து தகவல் ஆட்சியர் தர்ப்பகராஜ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைதொடர்ந்து, பெண்களை அலைக்கழிக்கக்கூடாது, எனவே, அவர்களை உள்ளே அனுமதிக்க உத்தரவிட்டார். அதன்பிறகு கலைஞர் உரிமை தொகை பெற வேண்டிய மனுக்களை குடும்ப பெண்கள் ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம்  வழங்கிவிட்டு சென்றனர்.

இருப்பினும், சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பிய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், அரசு சார்பில் சிறப்பு முகாம் நடைபெறுவதாக இருந்தால் முறையான தகவல் நாளிதழ்கள் வாயிலாக வெளியிடப்படும். எனவே, இது போன்ற தவறான தகவல்களை நம்பி பெண்கள் ஏமாற வேண்டாம் என அறிவுரை வழங்கி அவர்களை அனுப்பி வைத்தார். இந்த சம்பத்தால் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் 2 மணி நேரத்துக்கு மேலாக சலசலப்பு ஏற்பட்டது.                   

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com