
தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களும் அன்றாடம் அணுகும் அரசு துறைகளில் சேவைகள் மற்றும் திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை தொடங்கி இருக்கிறது. இந்த முகாம்கள் கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கிய நிலையில் வரும் நவம்பர் மாதம் வரை இந்த முகாம்கள் நடைபெற இருக்கின்றன .
இந்நிலையில் தமிழகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற சிறப்பு திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தி மக்களிடம் அரசு அதிகாரிகள் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெறுகின்றனர். பல மனுக்களுக்கு உடனடியாக தீர்வும், விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்கள் மீது அதிகபட்சம் 45 நாட்களுக்குள் தீர்வு காண முதல்-அமைச்சர் உத்தரவிட்டு இருந்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 22-ந் தேதி திருப்புவனம் புதூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மொத்தம் 1,004 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து அரசு அதிகாரிகள் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெற்ற சுமார் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் வைகையில் மிதந்தன.
தண்ணீரில் மிதந்த மனுக்களை அந்த வாலிபர்கள் எடுத்து கரையில் காய வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று அந்த மனுக்களை கைப்பற்றி , யார் பாதுகாப்பில் இந்த மனுக்கள் இருந்தன, எவ்வாறு அவை அலுவலகத்தில் இருந்து வெளிவந்தன, வைகை ஆற்றில் மனுக்களை கொண்டு போய் போட்டது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் படு வேகமாக வைராகி பரவி பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ மூலம் இதுவரை 11.50 லட்சம் மனுக்கள் வந்திருப்பதாகவும், மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் மட்டும் சுமார் 17 லட்சம் மனுக்கள் வந்திருப்பதாகவும், இந்த மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இவ்வாறு மனுக்கள் வைகை ஆற்றில் மிதப்பது சமானிய மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதுமட்டுமின்றி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்ப நிலையை https://kmut.tn.gov.in/index.html என்ற அரசின் வெப்சைட்டின் மூலம் அறிந்து கொள்ளும் நிலைஇருந்தது. இந்நிலையில் தற்போது "உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிய" என்ற ஆப்சன் அரசின் வெப்சைட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதனால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதக்கும் வீடியோ வைரலான நிலையில் முகாம் மூலம் பெறப்படும் மனுக்கள் மீது உண்மையாகவே உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா, தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா என்ற சந்தேகம் தற்போது மக்கள் மனதில் எழுந்துள்ளது.
மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனைகள் நடைபெற்று வருவதாக அரசு கூறிவரும் நிலையில், மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படுகிறதா அல்லது இவ்வாறு தொலைக்கப்படுகிறதா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்த நிலையில் தங்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைவில் தீர்வு கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்களின் மனதில் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியையும், நமக்கு பணம் கிடைக்குமா, கிடைக்காத என்ற கவலையையும் ஏற்படுத்தி உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.