

பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் நாளை, புதன்கிழமை (ஜூலை 1 ) முதல் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12-ம்தேதி உத்தரவிட்டது.
தற்போது ஈரான்-அமெரிக்க இடையே போர் நிறுத்தத்துக்கான அமைதி ஒப்பந்தம் கையொழுத்தாகி சர்ச்சைக்குரிய ஹார்முஸ் நீரிணை பகுதியில் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து சீரானதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்படு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது. இந்தியாவில் தட்டுப்பாடு நிலையிலும் சிலர் பீதி காரணமாக பெட்ரோல், டீசலை அதிகளவில் வாங்கி பதுக்கினர். எனவே நிலைமையை சரிசெய்ய, பெட்ரோல், டீசல் விற்பனையில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
குறிப்பாக சில்லறை விற்பனை நிலையங்கள் வாகனங்களில் டேங்கில் மட்டுமே டீசல் நிரப்ப வேண்டும், அதுவும் நாளொன்றுக்கு ஒரு வாடிக்கையாளருக்கு 200 லிட்டருக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என்றும் தடை செய்யப்பட்டது.
அதன்படி, வணிக நிறுவனங்கள், வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசலை நுகர்வோர் சில்லறை விற்பனை நிலையங்களில் மொத்தமாக வாங்க தடை விதிக்கப்பட்டது.
உலகளாவிய விநியோகத் தடைகளுக்கு மத்தியில் உள்ளூர் அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே இந்தக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.
விலை அதிகரிப்பு காரணமாக மொத்த பயனாளர்கள் பெட்ரோல் நிலையங்களில் இருந்து அதிகமாக வாங்க தொடங்கியதால் சில பகுதிகளில் டீசலுக்கான தேவை அசாதாணமாக அதிகரித்தது.
டீசலின் கள்ளச்சந்தை மற்றும் பதுக்கலைத் தடுக்கவும், தொழில் மற்றும் வர்த்தக நுகர்வோர் சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்து எரிபொருளை வாங்குவதைத் தடுக்கவும், உள்ளூர் மட்டத்தில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பதற்காகவும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஜூன் 12-ம்தேதி பெட்ரோல், டீசலுக்கான கட்டுப்பாட்டு உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இந்த கட்டுப்பாடுகள் 90 நாட்களுக்கு அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முடிவுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது மேற்கு ஆசிய போர் முடிவுக்கு வந்து கச்சா எண்ணெய் போக்குவரத்து சீரடைந்து வருகிறது. மேலும் ஹார்முஸ் நீரிணையில் கச்சா எண்ணெய் போக்குவரத்து சீராக தொடங்கி வருகிறது.
எனவே பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை நாளை முதல் அதாவது ஜூலை 1-ம்தேதி முதல் நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இதற்கான உத்தரவை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் பிறப்பித்துள்ளது. அதன்படி நாட்டில் நிலவும் பெட்ரோலிய பொருட்களின் வினியோக நிலவரம் குறித்து ஆய்வு செய்த பின்னர், ஜூன் 12-ந்தேதி கொண்டு வரப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் இனியும் செயல்படுத்த தேவையில்லை என்று அமைச்சகம் முடிவுக்கு வந்துள்ளது.
அதன்படி ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நாளை முதல் அதாவது ஜூலை 1-ம்தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது.