
லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம். அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கிறார்களா? உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், புகார் செய்யுங்கள். அந்த வகையில், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக செல்லும் போது அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஓழிப்புத் துறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
அரசின் நலத்திட்டங்கள் தொடர்பான மனுக்கள், கோரிக்கைகளுக்கு லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பட்டா வாங்க, நிலத்தை அளக்க, பட்டா பெயர் மாற்றம் செய்ய மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் வாங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர், சர்வயேர், தாசில்தார் ஆகியோரிடம் கையெழுத்து பெற வேண்டும்.
என்ன தான் ஆன்லைனில் அப்ளை செய்தாலும், நிலத்தை அளக்க வரும் சர்வேயர் தொடங்கி, விஏஓ, தாசில்தார் ஆகியோரிடம் லஞ்சம் கொடுக்காமல் வாங்குவது எளிதானதாக இல்லை என்று பலர் குற்றம்சாட்டுகிறார்கள். எல்லா அரசு அலுவலகங்களில் இப்படியான நிலை இல்லை என்றாலும், இதுபோன்ற சூழ்நிலை இருக்கிறது என்பதே பலரது குற்றச்சாட்டாக உள்ளது.
அந்த வகையில் தமிழக அரசு விவசாயிகள், பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், தொழில் முனைவோர், வணிகர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், கிராமப்புற மக்கள், ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு அரசு சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறது.
மேலும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களை உடனடியாக சென்று அடைய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளது. எனவே, திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்கள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறும் போது அல்லது அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தொடர்பான மனுக்கள்,
கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீசாரிடம் புகார் அல்லது தகவலை நேரிலோ அல்லது செல்போன் மூலமாகவோ தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து புகார் கொடுக்கும் பொதுமக்களின் பெயர், விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் உங்களின் லஞ்சம் தொடர்பான புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர்-9498106044, இன்ஸ்பெக்டர்கள்-9498150600, 9442223011, அலுவலக தொலைபேசி எண் 04175-232619 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்.
மேலும் புகார்தாரருக்கு அவர்கள் புகார் தொடர்பான அரசு சேவையும் உரிய துறையின் மூலம் உடனடியாக பெற்றுத் தரப்படும்.
ஒவ்வொருவரும் அலைய விடுகிறார்களே என்று நினைத்து லஞ்சம் கொடுப்பதும், சிலர் 3 நாளில் முடிய வேண்டிய வேலையை உடனே முடிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுவதும், இருந்த இடத்தில் இருந்தே எல்லா வேலைகளையும் உடனே அரசு ஊழியர்கள் செய்து தர வேண்டும் என்று நினைத்து லஞ்சம் கொடுப்பதும் லஞ்சம் ஒழியாமல் இருக்க முக்கிய காரணமாக உள்ளது.