

இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமென்ட். இந்தியாவில் இப்போது யுபிஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு நிமிடமும் லட்சக்கணக்கானவர்கள் யுபிஐ பரிவர்த்தனையில் ஈடுபடுவதாகவும், ஒரு மாதத்தில் சுமார் 1,600 கோடிக்கு மேல் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது. இதனால், இந்தியாவில் ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.
கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பண பரிவர்த்தனைகயின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது யுபிஐ நெட்வொர்க்கில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இந்த அழுத்தத்தைக் குறைக்கவும், சேவையின் செயல்திறனை அதிகரிக்கவும் யுபிஐ பரிவர்த்தனையில் இன்று முதல் (நவம்பர் 3-ம் தேதி) மிக முக்கியமான ஒரு மாற்றம் வர இருக்கிறது. இதன் மூலம் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற பிரபல யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்யும் முறையில் முக்கிய மாற்றம் ஏற்படவுள்ளது. இந்த மாற்றம் நம்முடைய யுபிஐ பரிவர்த்தனையை துரிதப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் சீரான முறையில் பரிவர்த்தனை நடைபெறுவதையும் உறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.
தற்போதைய நடைமுறையின்படி, யுபிஐ அமைப்பில் ஒரு நாளில் 10 செட்டில்மென்ட் சுழற்சிகள் உள்ளன. இந்த சுழற்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் (authorised transactions) மற்றும் பிரச்சனைக்குரிய பரிவர்த்தனைகள் (dispute-related settlements) என இரண்டு பரிவர்த்தனைகளாக பிரிக்கப்படுகின்றன.
தற்போது இந்தியாவில் யுபிஐ பயன்பாடு என்பது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. எனவே இப்படி ஒரே ஒருங்கிணைந்த முறையில் இந்த இரண்டு விதமான பரிவர்த்தனைகளையும் செட்டில் செய்வதால் தாமதங்கள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், இந்த இரண்டு பரிவர்த்தனைகளும் இனி தனித்தனி சுழற்சிகளில் கையாளப்படும் என NPCI தெரிவித்திருக்கிறது. இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த விதிமுறையின் படி அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் மட்டுமே தினமும் நடைபெறக்கூடிய வழக்கமான பத்து சுழற்சிகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கையாளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள், இனிமேல் இரண்டு பிரத்யேக சுழற்சிகளில் அதாவது, நள்ளிரவு முதல் மாலை 4 மணி வரையும், மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரையும் என இரண்டு சுழற்சிகளில் கையாளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தால், இனிமேல் பண பரிமாற்றங்கள் இன்னும் வேகமாக நடைபெறும் என்றும், தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கான பணம் திரும்ப கிடைப்பதில் இருந்த தாமதம் இனி நீங்கும் என்றும் கூறப்படுகிறது.