

கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் உலகம் உங்கள் கையில் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5-ந்தேதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த 2025-26 பட்ஜெட்டில் ரூ.2,000 கோடியை ஒதுக்கியுள்ளது.
தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மடிக்கணினிகளில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD நினைவகம், Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில்,
நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் “அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்” என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro–வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.
அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகள், கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூக–பொருளாதார முன்னேற்றத்திற்கும் நேரடி ஆதாரமாக உதவுகின்றன.
முதல் கட்டமாக 10 லட்சம் பேருக்கும், 2-வது கட்டமாக 10 லட்சம் பேருக்கும் என 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், நடப்பாண்டு 9 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு அரசால் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு உள்ளது. மடிக்கணினி வாங்க நிதி இல்லாத மாணவர்கள், படிப்புக்கு மடிக்கணினி தேவைப்படும் மாணவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்ட கலை, அறிவியல், பொறியியல், விவசாயம் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக மடிக்கணினிகள் பெறத் தகுதி வாய்ந்தவர்கள்.
இந்நிலையில், இதற்கான விண்ணப்பம் தொடங்கி உள்ளது. இதற்கு பதிவு செய்யுமாறு கூறி ஒரு லிங்க் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உலா வருகிறது. இதனை சிலர் பகிர்ந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘மடிக்கணினி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று பரப்பப்படுவது மோசடியான லிங்க். இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.