

தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் இலவச மடிக்கணினி (Free Laptop) வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.கல்வி வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்துடன் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. 2011 முதல் 2016 வரை பல கட்டங்களில் வழங்கி வந்த நிலையில் குறிப்பாக 2015-16 கல்வி ஆண்டில் 'Phase V' மூலம் அதிகப்படியான மடிக்கணினிகள் விநியோகம் செய்யப்பட்டன. அதன் பிறகு வந்த ஆண்டுகளில் இத்திட்டம் படிப்படியாகக் குறைந்து நிறைவுற்றது.
மடிக்கணினிகளின் அவசியம் தற்போது மேலும் ஒவ்வொரு மாணவருக்கும் அவசியமாகி விட்ட நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு மீண்டும் இத்திட்டத்தை “உலகம் உங்கள் கையில்” (The World in Your Hands) என்ற பெயரில் மீண்டும் செயல்படுத்த 2025-26 நிதியாண்டில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இலவச மடிக்கணினி வழங்கும் புதிய திட்டத்தின் தொடக்க விழா, நாளை (05.01.2026, திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.தமிழ்நாடு அரசின் கல்வி நலத்திட்டங்களின் ஒரு முக்கிய பகுதியான இதன் நோக்கம் முதன்மையாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை, டிஜிட்டல் திறன் வளர்ச்சியை ஊக்குவிப்பது ஆகும்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு, மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற “உலகம் உங்கள் கையில்” என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, இத்திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் 5.1.2026 திங்கட்கிழமை அன்று மாலை 3 மணியளவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெறுகிறது" என வெளியிடப்பட்டுள்ளது.
"இந்நிகழ்ச்சியில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கும் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.
கல்வி அனைவருக்கும்! உயர்வு ஒவ்வொருவருக்கும்!” என்ற நோக்கத்துடன் தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மடிக்கணினிகளில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD நினைவகம், Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் “அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்” என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro–வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது.
அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகள், கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூக–பொருளாதார முன்னேற்றத்திற்கும் நேரடி ஆதாரமாக உதவுகின்றன. டிஜிட்டல் திறன் மேம்பாடு மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் (IT) துறை, மென்பொருள் உருவாக்கம் (Software Development), தரவு உள்ளீடு(Data Entry), டிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital Marketing), வரைகலை வடிவமைப்பு (Graphic Design), குறியிடுதல் (Coding), வலை வடிவமைப்பு (Web Designing), செயற்கை நுண்ணறிவு கருவிகள் (AI Tools), சுயாதீன வேலை (Freelancing) போன்ற துறைகளில் “புதிய வாய்ப்புகளைப் பெறும் புதிய தலைமுறை” என்ற அளவில் தகுதியானவர்களாக மாணவர்களை மாற்றிட உதவுகிறது. இதனால் குடும்ப வருமானம் உயர்ந்து, கிராம–நகர இடைவெளி குறைந்து, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழில் முயற்சிகளும் உருவாகும் வாய்ப்பு அமையும். இத்திட்டம், “கல்வி மூலம் சமூக மேம்பாடு; தொழில்நுட்பம் மூலம் பொருளாதார முன்னேற்றம்” என்பதையும், “உலகம் உங்கள் கையில்” என்ற தமிழ்நாட்டின் மாபெரும் டிஜிட்டல் கனவையும் நனவாக்கும் வரலாற்றுப் பெருமைகள் சேர்க்கும் மாபெரும் கல்விப் புரட்சித் திட்டம் ஆகும்"எனவும் திட்டத்தின் சிறப்புகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் பெரும்பகுதியாக 2026 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் தகுதியான மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் எனவும் தெரிகிறது.
இத்திட்டம் பற்றி அறிய அதிகாரப்பூர்வ இணையதளம்
Tamil Nadu Government Laptop Scheme Portal https://elcotlaptop.tn.gov.in/
(மின்னணு கார்ப்பரேஷன் ஆஃப் தமிழ்நாடு — ELCOT அதிகாரப்பூர்வ இணையதளம்)