

சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் (டிச. 20) தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமீப காலமாக தெரு நாய்களின் தாக்குதலால் நாடு முழுக்க பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீட்டு நாய் மற்றும் தெரு நாய் கடிகளினால் ஒரு சில குழந்தைகள் உட்பட பலரும் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் நாடு முழுக்க தெருநாய்களை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. தற்போது பிட்புல் , ராட்வீலர் போன்ற மிகவும் ஆக்ரோஷமான நாய்களை வளர்த்தால் அவர்களுக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மற்ற நாய்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் பிட்புல் மற்றும் ராட்வீலர் ரக நாய்கள் மிகவும் ஆபத்தான விலங்காக இருக்கிறது. இந்த நாய்கள் கடித்து சில நேரங்களில் நாய்களின் உரிமையாளர்கள் கூட உயிரிழந்துள்ளனர். மற்ற நாய்களைப் பொறுத்தவரையில் , பெரிய மனிதர்கள் விரட்டினாலோ, துரத்தி விட்டாலும் அவை போய்விடும். ஆனால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த நாய்கள் மிகவும் ஆபத்தான முறையில் மனிதர்களை தாக்கி மரணத்தை ஏற்படுத்தக்கூடியவை. இந்த நாய்களிடம் ஒருவர் மாட்டிக்கொண்டால் தப்பிப்பது மிகவும் கடினம்.
ஏற்கனவே அரசாங்கம் ஆக்ரோஷமான நாய்களை வளர்ப்பதின் ஆபத்தினை உணர்ந்து , அவற்றை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதைப் பின்பற்றி சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இன்று புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பிட்புல் மற்றும் ராட்வீலர் ரக நாய்கள் வளர்ப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இந்த நாய்களை மீறி வளர்ப்பவர்களுக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இது போன்ற 23 வகை ஆக்ரோஷமான நாய் இனங்களுக்குத் தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இனி மேல் பிட்புல் மற்றும் ராட்வீலர் ரக நாய்களை வளர்ப்பதற்காக வாங்கவோ, விற்பனை செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த நாய்களை வளர்ப்பவர்கள் , அந்த நாய்களுக்கு கட்டாயமாக கருத்தடை செய்திருக்க வேண்டும். இதன் மூலம் அந்த இனம் சென்னை மாநகராட்சியில் பரவ விடாமல் தடுக்கப்படுகிறது. இந்த ரக நாய்களை வெளியில அழைத்துச் செல்லும்போது கட்டாயம் கழுத்து பட்டை பொருத்தப்பட்டு ,அது சங்கிலி அல்லது பட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் . மேலும் இந்த நாய்களின் வாய்களை மூடியவாறு கவசம் அணிவித்திருக்க வேண்டும். இனிமேல் இந்த ரக நாய்களை வளர்ப்பவர்கள் மாநகராட்சியில் உரிமம் பெற தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் வளர்ப்பு பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது வீடு வீடாக சோதனை செய்து , யாரேனும் உரிமம் இல்லாமல் வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பது தெரிந்தால் அவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கென்று ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டு அவர்கள் வீடு வீடாக சோதனை செய்து கொண்டு வருகின்றனர்.
வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்துவதும் கட்டாயமாக்கப்படுகிறது. நாய்களால் ஏற்படும் கடி சம்பவங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு , நாயின் உரிமையாளரே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.