

காலை விடிந்ததும் வீடே காபி வாசனையில் மணக்கும். அப்பா ஒரு கையில் பேப்பரும், மறு கையில் காபியும் குடிப்பதைப் பார்த்துவிட்டு, அருகில் இருக்கும் மூன்று வயதுக் குழந்தை, "அப்பா, எனக்கும் கொஞ்சம் தாப்பா" என்று கெஞ்சும். பெற்றோர்களும், "பாவம் பிள்ளை ஆசையா கேக்குதே" என்று ஆற்றி, ஒரு டம்ளர் டீயையோ காபியையோ கையில் கொடுத்துவிடுவார்கள்.
இது பல வீடுகளில் நடக்கும் சாதாரணமாகக் காட்சிதான். ஆனால், அந்த ஒரு டம்ளர் பானம், உங்கள் குழந்தையின் வருங்கால ஆரோக்கியத்தையே கேள்விக்குறியாக்கும் என்று சொன்னால் நம்புவீங்களா?
இரும்புச்சத்தை உறிஞ்சும் எதிரி!
குழந்தைகள் வளரும் பருவத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தினமும் சத்தான காய்கறிகள், கீரைகள், முட்டை என்று பார்த்துப் பார்த்துச் சமைத்துக் கொடுக்கிறோம். ஆனால், சாப்பிட்டு முடித்ததும் ஒரு டம்ளர் டீ குடித்தால், அந்தச் சாப்பாட்டில் உள்ள சத்துக்கள் எதுவுமே உடலில் ஒட்டாது.
டீயில் இருக்கும் சில வேதிப்பொருட்கள், நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் இரும்புச்சத்தை ரத்தத்தில் கலக்க விடாமல் தடுத்துவிடும். இதனால் குழந்தை எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருக்கும், ரத்த சோகை வரும், சுறுசுறுப்பு இல்லாமல் எப்போதும் சோர்வாகவே காணப்படுவார்கள்.
மூளையைத் தாக்கும் காஃபின்!
பெரியவர்களுக்கு வேலைப்பளு அதிகம், அதனால் சோர்வை நீக்கக் காபி குடிக்கிறோம். ஆனால், குழந்தைகளுக்கு, காபி மற்றும் டீயில் இருக்கும் 'காஃபின்' (Caffeine) நரம்பு மண்டலத்தை அளவுக்கு அதிகமாகத் தூண்டிவிடும். இது அவர்களுக்கு ஒருவித பதற்றத்தை உண்டாக்கும். பள்ளியில் பாடத்தில் கவனம் செலுத்த முடியாது. ஒரு இடத்தில் அமைதியாக உட்கார மாட்டார்கள்.
அதுமட்டுமில்லாமல், இந்த காஃபின் அவர்களின் தூக்கத்தை மொத்தமாகக் கெடுத்துவிடும். இரவு நேரத்தில் டீ குடித்துவிட்டுப் படுக்கும் குழந்தைகளுக்கு ஆழ்ந்த உறக்கம் வராது. தூக்கம் கெட்டால், மறுநாள் முழுவதும் எரிச்சல், அடம் பிடிப்பது என்று அவர்களின் நடவடிக்கையே மாறிவிடும்.
பசி எடுப்பதே இல்லை!
பல அம்மாக்களின் புகார், "என் பையன் காலையில் சாப்பிடவே மாட்டேங்கிறான்" என்பதுதான். இதற்கு முக்கியக் காரணம், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கிற அந்த டீ தான். இது பசியைத் தூண்டும் ஹார்மோன்களை மந்தப்படுத்திவிடும். மேலும், குடலில் அமிலத் தன்மையை அதிகரித்து, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளை உண்டாக்கும். பசி இல்லை என்றால் குழந்தை சாப்பிடாது; சாப்பிடவில்லை என்றால் வளர்ச்சி இருக்காது.
சர்க்கரையும் ஒரு கேடு!
நாம் யாரும் கசப்பான காபியைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதில்லை. அதில் தாராளமாகச் சர்க்கரையைக் கொட்டித்தான் கொடுக்கிறோம். இந்த அதிகப்படியான இனிப்பு, பிஞ்சு பற்களில் சொத்தையை உருவாக்குவதுடன், தேவையில்லாத கலோரிகளைச் சேர்த்து உடல் பருமனுக்கும் வழிவகுக்கும்.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பால், சத்துமாவு கஞ்சி அல்லது பழச்சாறுகளைக் கொடுத்துப் பழகுங்கள். அவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காகக் காபியைக் கொடுத்து, அவர்களின் மூளை வளர்ச்சியையும், உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடாதீர்கள்.