
நாடு முழுக்க நாளை மறுநள் (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக அனைத்துப் பள்ளிகளிலும் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா போன்ற விழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டும் சுதந்திர தின விழாவிற்கு பள்ளிகள் சிறப்பான முறையில் தயாராகி வருகின்றன. இந்நிலையில் பள்ளிகளில் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்தியாவின் 78வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சில வழிகாட்டுதல்களை சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை.
இந்த சுற்றறிக்கையில், “நாளை மறுதினம் சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் எழுச்சியும், மகிழ்ச்சியும் மிக்க மிகச் சிறந்த நிகழ்ச்சியாக சுதந்திர தினம் கொண்டாடப்பட வேண்டும். பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக. பிளாஸ்டிக்கால் ஆன தேசியக் கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது. பள்ளியை வண்ண மலர்கள் மற்றும் காதிங்களால் அலங்கரித்து, தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.
இராணுவ வீரர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியோர்கள் உள்பட அனைவரையும் அழைத்து சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கு பெறச் செய்ய வேண்டும்.
மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் தேசியக் கொடிகளைக் கொடுக்கக் கூடாது. கிழிந்த தேசியக் கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது. அதேபோல் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றக் கூடாது.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் பள்ளி தலைமையாசிரியருக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி சுதந்திர தின விழாவை சிறப்பாக நடத்த வேண்டும். மாணவர்கள் மத்தியில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் பிளாஸ்டிக் கொடிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இவை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும். சுற்றுச்சூழலைக் காக்கவும், அனைவரும் தேசியக் கொடியை மதிக்க வேண்டும் என்பதற்காகவும் தான் பள்ளிக்கல்வித் துறை இம்முடிவை எடுத்துள்ளது. இந்த நடைமுறை இனிவரும் ஒவ்வொரு விழாவிலும் கடைபிடிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.