பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 14வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.
குடிமக்களுக்கு உதவும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்படி விவசாயிகளின் நலனுக்காக துவங்கப்பட்ட திட்டங்களில் ஒன்று பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana). இத்திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகை தலா 2,000 ரூபாய் வீதம் மூன்று கட்டணமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
அதாவது, விவசாயிகளின் கணக்கில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2,000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6000 ரூபாய் டெபாசிட் செய்யப்படுகிறது. பிரதமர் கிசான் திட்டத்தின் ஒரு பகுதியாக இதுவரை 13 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் செய்யப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து இன்று 14வது தவணை பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள சிகாரில் நடந்த நிகழ்ச்சியில், விவசாயிகளின் கணக்கில் தலா ரூ.2,000 செலுத்தினார். 14வது தவணையை வெளியிட்டு பேசிய அவர், ''பிரதமர் கிசான் சம்மன் நிதி என்பது உலகின் மிகப்பெரிய திட்டமாகும். இதில் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் அனுப்பப்படும். 14வது தவணை வரை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் கோடி நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது'' என்றார்.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் 14 வது தவணை இன்று வியாழக்கிழமை விநியோகிக்கப்படும் என்று மத்திய அரசின் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.