
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்துக்காக இந்திய விமானப்படையில் பணியாற்றிய சுபான்ஷு சுக்லா தேர்வு செய்யப்பட்டு, அவருடன் அமெரிக்காவை சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் கடந்த 25-ந் தேதி, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, பால்கன்-9 ராக்கெட் மூலம் 4 பேரும் விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர். ராக்கெட்டில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் 28 மணி நேரம் பயணித்து, சர்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த 26-ந் தேதி மாலை அடைந்தது.
இதன் மூலம் 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளிக்கு செல்லும் இந்தியர் என்ற பெருமையை பெற்றதுடன், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையையும் சுபான்ஷு சுக்லா படைத்தார். அவரும், அவருடன் சென்ற குழுவினரும் அங்கு 14 நாட்கள் தங்கியிருந்து 60-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளை செய்கிறார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன், பிரதமர் மோடி, ‘வெப்கேஸ்ட்’ நேரலை மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சுபான்ஷு சுக்லாவுக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது பேசிய சுபான்ஷு, தினமும் 16 முறை சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் பார்த்து வருவதாகவும், இந்தியாவை வரைபடத்தில் பார்ப்பதைவிட விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாகவும், பெரியதாகவும் தெரிகிறது என்றும் கூறினார். மேலும், "ஒற்றுமையின் உணர்வை உண்மையிலேயே உணர முடிந்தது. இங்கிருந்து பார்க்கும்போது ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுதான் என தோன்றியது. எந்த எல்லைகளும் கண்ணுக்கு தெரியவில்லை. இந்த முழு பூமியும் நமது வீடு போலவும், நாம் அனைவரும் அதன் குடிமக்கள் போலவும் உணர்ந்தேன்," என்று கூறினார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, "நீங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பது, 140 கோடி இந்தியர்களின் கனவை பிரதிபலிப்பதாக உள்ளது. நீங்கள் இந்தியாவில் இருந்து மிகத் தொலைவில் இருந்தாலும் இந்தியர்களின் இதயங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்த பயணம் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு முதல் படியாக அமையும். வளர்ந்த இந்தியாவுக்கு உத்வேகத்தை தரும்.
விரைவில் நமது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்க வேண்டும். மேலும் ஒரு இந்திய விண்வெளி வீரர் சந்திரனில் தரையிறங்குவதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் அனுபவங்கள் இந்த எதிர்கால பயணங்கள் அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கும். இன்று உங்களுடன் பேசுவது உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது," என்று கூறினார்.
இவ்வாறு அவர்கள் இருவருடைய உரையாடல் 18 நிமிடங்கள் நீடித்தது.