
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, பால்கன்-9 ராக்கெட் மூலம் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4' என்ற மனித விண்வெளி பயணத்திற்கான ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. டிராகன் விண்கலம் நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்கு மற்றும் மனிதர்களை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு ராக்கெட் தயார் நிலையில் இருந்தது. இதில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உடன், அமெரிக்காவை சேர்ந்த திட்டத்தின் கமாண்டர் பெக்கி விட்சன் மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேர் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
புதிதாக உருவாக்கப்பட்ட இந்த தனியார் விண்கலம், ஆக்ஸியம் ஸ்பேஸ் தலைமையில், அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களுடன் விண்வெளிக்கு அதன் முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளது. பதினைந்து நாட்கள் நீடிக்கும் இந்த பயணத்தின் போது, அவர்கள் 60 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளனர். அதில் ஏழு இந்திய ஆராய்ச்சியாளர்களால் முன்மொழியப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விண்வெளி வீரர் சுபான் ஷூ சுக்லா இந்த விண்கலத்தை இயக்க உள்ளார். மேலும் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஆக்ஸியம் ஸ்பேஸால் இந்த பணிக்காக இவர் பயிற்சி பெற்றுள்ளார்.
சமீபத்திய ஊடக உரையாடலில், குரூப் கேப்டன் சுக்லா, ‘நான் கருவிகள் மற்றும் உபகரணங்களை மட்டுமல்ல, பில்லியன் இதயங்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளையும் என்னுடன் எடுத்துச் செல்கிறேன்’ என்று கூறினார்.
ஆனால், திட்டமிட்டபடி இந்த திட்டம் செயல்படுத்த இயலவில்லை. வானிலை, ஆக்சிஜன் கசிவு போன்ற பல்வேறு காரணங்களால் 7 முறை விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
கடைசியாக, கடந்த 22-ந்தேதி விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் இந்த பயணம் காலவரையின்றி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக நாசா அறிவித்தது.
இந்த சூழ்நிலையில், வானிலை 90 சதவீதம் சாதக நிலையில் உள்ளது தெரியவந்ததையடுத்து விண்வெளி பயணம் இன்று தடையின்றி மேற்கொள்ளப்படும் என்று நாசா அறிவித்தது.
இதனை தொடர்ந்து, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்த நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் இந்திய நேரத்தின்படி, இன்று மதியம் 12.01 மணிக்கு ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் விண்ணில் பாய்ந்தது.
சுமார் 28 மணி நேர சுற்றுப்பாதைப் பயணத்தைத் தொடர்ந்து, ஆக்ஸியம்-4 குழுவினர் நாளை மாலை 4.30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய உள்ளனர்.
1984-ம் ஆண்டு கமாண்டர் ராகேஷ் சர்மா விண்வெளிப் பயணத்தை அடுத்து விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுக்லா என்பது குறிப்பிடத்தக்கது. சுபான்ஷூ சுக்லா ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.