பீகாரில் +2 முடித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை மட்டுமே மாநில அரசின் மூலம் வழங்கப்பட்டு வந்தது இந்நிலையில், தற்போது பட்டதாரி இளைஞர்களும் மாதம் ரூ.1000 உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்யும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்க இருக்கிறார்.
பீகாரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில இளைஞர்களை கவரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இதில் முக்கிய அம்சமாக, Mukhyamantri Nishchay Swayam Sahayata Bhatta Yojana திட்டத்தின் கீழ் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் 5 லட்சம் பட்டதாரிகளுக்கு பயனளிக்கும் ஒரு திட்டமாக அறிவிக்கப்பட உள்ளது. இத்திட்டம் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஏற்கெனவே செயல்படுத்தி வரும் 7 உறுதிமொழி திட்டத்தின் ஒரு பகுதியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
முன்பு இந்த உதவித்தொகை +2 முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இத்திட்டம் கலை, அறிவியல் மற்றும் வர்த்தக பிரிவுகளில் பட்டம் பெற்ற 20 முதல் 25 வயதுக்குட்பட்ட, வேறு எந்த படிப்பையும் தொடராத, அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இல்லாத அல்லது சுயதொழில் செய்யாத பட்டதாரி இளைஞர்களும் வேலையில்லாத இளைஞர்களும் பயனடையும் வகையில் இத்திட்டம் நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது..
இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள இளைஞர்கள் அனைவரும் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000த்தினைப் பெறுவர்.இந்த நிதியுதவி, இளைஞர்கள் தங்களுக்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளவும், போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ளவும் உதவும் எனக் கூறப்படுகிறது. இதனால் இளைஞர்களிடையே பீகாரில் எதிர்காலத்தில் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை பெருகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.