

இந்தியாவில் கடந்த மாதத்தில் எக்ஸ் தளத்தில் அதிகம் விரும்பப்பட்ட மற்றும் மறுபதிவு செய்யப்பட்ட பட்டியலில் பிரதமர் மோடி இடம் பெற்றுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடந்த 2022ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ரஷ்யா–உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்த ரஷ்ய அதிபர் புதின் டெல்லியில் நடைபெற்ற இந்தியா–ரஷ்யா 23வது உச்சி மாநாட்டில் கலந்துக் கொண்டார்.
இந்த இரண்டு நாட்கள் பயணத்தின் போது நடந்த நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பகிந்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் அதாவது கடந்த 30 நாட்களில், எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அதிகம் விரும்பப்பட்ட மற்றும் மறுபதிவு செய்யப்பட்ட பதிவுகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அதில் பிரதமர் மோடி வெளியிட்ட 8 கருத்துகள் அல்லது படங்கள்தான் அதிகம் விரும்பப்பட்ட மற்றும் மறுபதிவு செய்யப்பட்ட பதிவுகளாக தெரியவந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் இருநாட்டு தலைவர்களும், அதாவது பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் காரில் பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அனைவராலும் அதிகம் விரும்பப்பட்டு உள்ளது. அந்த புகைப்படம் 34 ஆயிரம் மறுபதிவுகளையும், 2 லட்சத்து 14 ஆயிரம் லைக்குகளையும் பெற்று உள்ளது.
மற்றொரு பதிவு, பிரதமர் மோடி ரஷ்ய மொழியில் பகவத் கீதையின் வழங்கிய பதிவு 29,000 மறுபதிவுகளையும் 2.31 லட்சம் லைக்குகளையும் பெற்று உள்ளது.
அதேபோல் இரவு விருந்து அளித்த பிரதமர் மோடி - புதின் படங்கள் 28,100 மறுபதிவுகளையும் 2.18 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எக்ஸ் வலைத்தளத்தில் மோடியின் 8 வலைத்தள பதிவுகளும் சேர்த்து ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 700 மறு பதிவுகளையும், 14.76 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளன. இப்படி அதிகம் பகிரப்பட்ட மற்றும் விரும்பப்பட்ட பதிவுகளை கொண்ட முதல் 10 பேர் பட்டியலில் இடம் பெற்ற ஒரே அரசியல்வாதியும் மோடிதான். அவரது 8 பதிவுகளே முதல் 10 இடங்களை ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.