

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு நேற்று வந்துள்ளார். அவரை டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் இணைந்து ஒரே காரில் பிரதமர் இல்லத்திற்குச் சென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் இணைந்து பயணித்த Toyota Fortuner Sigma கார் இப்போது பொதுமக்களின் சிறப்பு கவனத்தை பெற்றுள்ளது. பிரதமர் மோடி பெரும்பாலும் தனது சொந்த பயணங்களுக்கு இந்த கருப்பு நிற காரையே பயன்படுத்தி வருகிறார். இந்த கார் பிஎஸ் -6 ரகத்தை சேர்ந்தது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மோட்டார் விதிகளின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட்டு டீசலில் இயங்கும் கார் இதுவாகும்.
கடந்தாண்டு ஏப்ரல் 24ம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த காருக்கு தகுதிச் சான்றிதழ் வரும் 2039ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி வரை உள்ளது. விவிஐபி பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் இந்த காரில் உள்ளன.இதில் குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. காரின் வேகமும் மற்ற வசதிகளும் விவிஐபிக்கள் பயணிக்கும் தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.
இது 2.8 லிட்டர் டீசல் எஞ்சினை கொண்டது. 2,755 சிசி திறன் கொண்ட இந்த எஞ்சின், 3,400 ஆர்பிஎம் திறன் மற்றும் 1,600 முதல் 2,800 என்எம் டார்க் இழுவிசையையும் கொண்டது. இதில் 6 கியர்கள் உள்ளன.இந்த காரின் தொடக்க விலை ₹43.67 லட்சம் முதல் டாப் வேரியண்ட் விலை ₹61.58 லட்சம் வரை உள்ளது. இந்த காரின் பதிவெண் MH01EN5795 ஆகும்.
டெல்லியில் காற்று மாசு அபாயம் இருப்பதால், தற்போது உயர் பொறுப்பில் உள்ள அனைத்து முக்கியப் பிரமுகர்களும் காற்று மாசில்லா அல்லது மாசு குறைவான வாகனங்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். பொதுவாக ரஷ்ய அதிபர் புதின் தனது பாதுகாப்பிற்காக மாஸ்கோவில் வடிவமைக்கப்பட்ட Aurus Senat காரைப் பயன்படுத்துவார். இந்தக் கார் ரோல்ஸ் ராய்ஸ் காரின் தோற்றத்தில் காட்சி தருவதாக அமைந்துள்ளது.
தற்போது இந்த இரு கார்களும் பொது மக்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்தடைந்தபோது, பிரதமர் மோடி அவரை டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர், பிரதமர் இல்லத்தில் மோடி ஏற்பாடு செய்திருந்த விருந்தில் புடின் பங்கேற்றார். விருந்துக்குப் பிறகு சிறிது நேரம் இரு நாட்டுத் தலைவர்களும் உரையாடினர். இதையடுத்து, இரவு 8.30 மணியளவில் புதின் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுக்குப் பகவத் கீதையின் ரஷ்யப் பதிப்பைப் பரிசாக வழங்கினார். இது தொடர்பான புகைப்படத்தைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, "ரஷ்ய மொழியில் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.