

தமிழக சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஏறத்தாழ அனைத்துக் கட்சிகளும் தயாராகி விட்டன. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற தற்போது முழுவீச்சுடன் செயல்படத் தொடங்கிவிட்டன. தேர்தல் பரப்புரை, தேர்தல் கூட்டணி, தொகுதிகளில் பங்கீடு போன்றவை தீவிரமாக நடந்து வருகின்றன. திமுக கூட்டணியில் பழைய கட்சிகள் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் மட்டும்தான் குழப்பத்தில் இருந்து வருகிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் அதிமுகவுடன் பாஜக மட்டுமே இருந்த நிலையில், தற்போது மேலும் பல புதிய கட்சிகள் இணைந்துள்ளன. இதனால் இனி தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக தீவிர கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முன்பு முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க மாட்டேன் எனக் கூறியிருந்த டிடிவி தினகரன், இரு நாட்களுக்கு முன்பு அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டார். இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். அவருடன் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, அமமுகவின் டிடிவி தினகரன், பாமகவின் அன்புமணி ராமதாஸ், ஐஜேகேவின் பாரிவேந்தர், தமாகாவின் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் மேடையேற உள்ளனர்.
பிரதமர் மோடியின் மதுராந்தகம் வருகையையொட்டி மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உச்சக் கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று பிற்பகல் முதல் வழக்கமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் மாமண்டூர் மற்றும் மாமல்லபுரம் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.
பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்திலிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரை நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் ஹெலிபேட் வரை இயக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். இப்பகுதி முழுவதையும் மத்திய பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இன்று மேடையேறும் தலைவர்களுடன் பிரதமர் மோடி கையை உயர்த்தி தங்கள் கூட்டணியின் பலத்தை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுறது.