75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம்: இன்று முதல் தொடக்கம்!
பெண்கள் சுயதொழில் தொடங்க உதவும் வகையில் ரூ.10,000 நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்தை, பீகாரில் இன்று (செப்.24) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ‘முக்கியமந்திரி மஹிலா ரோஜ்கர் யோஜனா’ என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்த திட்டத்தை பீகார் அரசு செயல்படுத்த உள்ளது. சுமார் 75 ஆயிரம் பெண்களுக்கு மாதம் ரூ.10,000 வழங்கப்பட உள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. பீகாரில் வரும் டிசம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த திட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
முதலமைச்சரின் மகளிருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 75 லட்சம் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு, முதற்கட்டமாக தலா ரூ.10,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை குடும்பங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு கோடியே 11 லட்சம் பெண்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் தகுதியான 75 லட்சம் பெண்களை தேர்வு செய்து, முதற்கட்டமாக ஒவ்வொரு தகுதியான குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட உள்ளது.
இந்த நிதியுதவி, பெண்கள் தொழில்களைத் தொடங்கவோ அல்லது விரிவாக்கவோ அவர்களுக்கு உதவும். இந்தத் தொகையை பெண்கள் தையல், கால்நடை வளர்ப்பு, விவசாயம், கைவினைப் பொருட்கள் அல்லது வர்த்தகம் போன்ற சிறு வணிகங்களைத் தொடங்கப் பயன்படுத்தலாம். இந்த தொகை பெண்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும். அதுமட்டுமின்றி 6 மாத ஆய்வுக்கு பிறகு, பணம் பெற்றவர்களின் தொழில் திறனை எப்படி உள்ளது என்று ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ரூ.2 லட்சம் கடன் உதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவெனில், முதற்கட்டமாக வழங்கப்படும் ரூ.10,000 த்தை திருப்பித் தரத் தேவையில்லை என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும். அவர் அரசுப் பணியில் இல்லாத, வருமான வரி செலுத்தாத குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், சுயஉதவிக் குழுவில் உறுப்பினராகவும், பெற்றோர் இல்லாத? திருமணமாகாத வயது வந்த பெண்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக இந்த திட்டத்தை தொடங்கி வைத்தவுடன் பயனாளர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக பணம் பரிமாற்றம் செய்யப்படும்.