தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட இன்று கோவை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
தமிழ்நாட்டில் வரும் செவ்வாய்க்கிழமையுடன் பரப்புரை நிறைவடையும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். கடந்த 15 ஆம் தேதி நாகர்கோவில் வந்த பிரதமர் வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ சென்றார்.
இன்று கோவை வரும் பிரதமர் மாலை 6:00 மணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு பொதுக்கூட்டத்தின் வாயிலாக வாக்கு சேகரிக்க உள்ளார். கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிகழ்வில் கோயம்புத்தூர் திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
இதற்காக பிரம்மாண்ட மேடை மற்றும் சுமார் 5 லட்சம் பேர் அமரும் விதமாக மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மைதானத்தின் கடைசி வரிசையில் இருப்பவர்களும் பிரதமரின் உரையைத் தெளிவாகப் பார்க்கும் வகையில் பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் மற்றும் மின்விளக்குகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன.
பிரதமரின் கோவை வருகையை முன்னிட்டு, மாநகரம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக கோவையின் பல்வேறு பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அவிநாசி சாலை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சிட்ரா, காந்தி மாநகர், நேருநகர், சிங்கநல்லூர், சின்னியம்பாளையம், காளப்பட்டி, நீலாம்பூர் மற்றும் இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லா விமானங்களான “ட்ரோன்கள்’ பறக்க விடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.