

மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வரும் வேளையில், நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் ஆரோக்கியத்தையும் காக்கும் நோக்கில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அண்மையில் 10 முக்கிய வேண்டுகோள்களை முன்வைத்துள்ளார். ‘இதன் மூலம் தேச சேவையும் நடக்கும், உடல் நலனையும் காக்கலாம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேச நலனும் உடல் நலனும்: பிரதமர் மோடி காட்டும் 10 எளிய வழிகள்!
1. சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைத்தல்:
சமையலில் எண்ணெய் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், இந்தியா தனது தேவைக்கான சமையல் எண்ணெயைப் பெருமளவில் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. ஒவ்வொரு குடும்பமும் தங்களின் தினசரி சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10 விழுக்காடு குறைத்துக் கொண்டால், அது நாட்டின் கருவூலத்தைக் காப்பதோடு, இதய நோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகள் இல்லாமல் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
2. பெட்ரோல் மற்றும் டீசலைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல்:
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $120-ஐத் தாண்டியுள்ள சூழலில், எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி விரயமாவது தடுக்கப்படும்.
3. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல்:
நகரங்களில் வசிப்பவர்கள் தங்களின் தனிப்பட்ட வாகனங்களைத் தவிர்த்து, பெருமளவில் மெட்ரோ ரயில்கள் மற்றும் பொதுப் பேருந்து வசதிகளைப் பயன்படுத்த வேண்டும். இது எரிபொருள் தேவையைத் தனிநபர் அளவில் பெருமளவு குறைக்கும்.
4. கார் பூலிங் (Car Pooling) முறையைப் பின்பற்றுதல்:
தனியார் வாகனங்களில் அலுவலகம் செல்வோர், ஒரே பகுதிக்குச் செல்லும் தங்களின் நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுடன் இணைந்து ஒரே காரைப் பகிர்ந்துகொண்டு பயணிக்கும் 'கார் பூலிங்' முறையை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
5. மின்சார வாகனங்களுக்கு (EV) மாறுதல்:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனத்திற்கு மிகச் சிறந்த மாற்று மின்சார வாகனங்கள் ஆகும். ஏற்கனவே மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்கள், அவற்றைத் தங்களின் முதன்மை வாகனமாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6. ஒர்க் ஃபிரம் ஹோம்;
கொரோனா பேரிடர் காலத்தில் நாம் கற்றுக் கொண்ட ‘வீட்டிலிருந்தே வேலை செய்யும்’ முறையைத் தற்போதைய சூழலில் நிறுவனங்கள் மீண்டும் முன்னெடுக்க வேண்டும். இது பணியாளர்களின் பயண நேரத்தையும், வாகனங்களுக்கான எரிபொருள் தேவையையும் பெருமளவு மிச்சப்படுத்தும்.
7. இணையவழி மற்றும் ஆன்லைன் கூட்டங்கள்:
அலுவலகப் பணிகள் மற்றும் முக்கிய ஆலோசனைகளுக்கு நேரடிப் பயணங்களைத் தவிர்த்துவிட்டு, வீடியோ கான்பரன்ஸ் மற்றும் ஆன்லைன் கூட்டங்கள் மூலமாகவே உரையாடல்களை நிகழ்த்த முன்னுரிமை அளிக்க வேண்டும்.
8. தங்கம் வாங்குவதைக் குறைத்தல்:
எரிபொருளுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் அந்நியச் செலாவணி பெருமளவில் செலவாவது தங்கம் இறக்குமதிக்காகத்தான். எனவே, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குறைந்தது ஒரு வருடத்திற்குத் தங்கம் வாங்குவதைத் தள்ளிப்போட வேண்டும் என்று பிரதமர் தனிப்பட்ட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
9. வெளிநாட்டுச் சுற்றுலாக்களைத் தவிர்த்தல்:
அந்நிய நாட்டுச் செலாவணி வெளியேறுவதைக் கட்டுப்படுத்த, ஆடம்பரமான வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் மற்றும் வெளிநாடுகளில் நடத்தும் திருமண நிகழ்வுகளைத் தவிர்த்துவிட்டு, உள்நாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும்.
10. இயற்கை விவசாயம்:
விவசாயத் துறையிலும் ரசாயன உரங்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, விவசாயிகள் ரசாயன உரங்களின் பயன்பாட்டை பாதியாகக் குறைத்து, இயற்கை விவசாயத்தை நோக்கி நகர வேண்டும். மேலும், டீசல் பம்புகளுக்குப் பதிலாகச் சோலார் நீர்ப்பம்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.