

சுயதொழில் தொடங்கி, அதன் உரிமையாளராக பொருளாதார சுதந்திரம் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு நன்மை தரும் ஒரு உன்னத திட்டம் தான் மத்திய அரசின் PMFME (Pradhan Mantri Formalisation of Micro Food Processing Enterprises) திட்டம் எனப்படும் 'பிரதம மந்திரி நுண் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம்' ஆகும்.
இத்திட்டம் நீங்கள் உணவுப் பொருட்கள் மீதான சிறு தொழில் துவங்க கடனுதவி வழங்கி தொழில்களை ஊக்குவிக்கும் முக்கியத் திட்டமாகும். இது 2020-ல் உணவு பதப்படுத்தல் தொழில்கள் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் சிறு அளவிலான உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தி அதற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை வழங்குவதாகும்.
ஊறுகாய் முதல் சோடா வரை உள்ள உணவு சம்பந்தப்பட்ட தொழில்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெறலாம் என்பதுடன் மானியமாக 35 சதவீதம் பெறலாம் என்பதும் கூடுதல் சிறப்பு. உதாரணமாக நீங்கள் தகுந்த ஆதாரங்களுடன் சுமார் ₹10 லட்சம் கடனுதவி பெற்றால் அதில் மானியம் ₹3 லட்சம் வரை கழிக்கப்பட்டு திரும்ப ₹7 லட்சம் மட்டும் செலுத்தினால் போதும்.
இத்திட்டத்தின் மூலம் சுமார் ₹10,000 கோடி நிதியுதவியில் சுமார் 2 லட்சம் நுண் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ஆதரவு கிடைத்து நாடு முழுவதும் பலர் சுயதொழில் தொழிலதிபர்களாக உயர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கும் முறையில் ஒரு சிறப்பு அடங்கியுள்ளது. ஆம் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற (One District One Product) விதிமுறையின் கீழ் அந்தந்த மாவட்டத்தின் சிறப்பு உணவுப் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. உதாரணமாக சேலம் மாவட்டத்தில் நீங்கள் வசித்தால் அப்பகுதியில் பிரசித்தம் பெற்ற மரவள்ளிக் கிழங்கில் செய்யப்படும் மசாலா மரவள்ளி சிப்ஸ், ஜவ்வரிசி வடை மிக்ஸ், மரவள்ளி முறுக்கு போன்றவற்றில் சிறிய தொழில் குறைந்த முதலீட்டில் தொடங்க விரும்பி சான்றுகள் அளித்தால் முன்னுரிமை கிடைக்கும்.
இத்திட்டத்தின் கீழ் உதவி விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் :
தனிநபர் உணவு தொழில் முனைவோர்கள், சுய உதவிக் குழுக்கள்
விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் ,
கூட்டுறவு சங்கங்கள், புதிய அல்லது ஏற்கனவே இயங்கி வரும் நுண் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியோர் இதற்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதி உதவி மற்றும் மானியம் ..
தனிநபர் தொழில் முனைவோருக்கு திட்டச் செலவில் 35% வரை மானியம் அளிக்கப்படுகிறது. அதிகபட்ச மானியமாக ₹10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் தொழில் முதலீட்டில் 10% பயனாளியின் பங்களிப்பு இருப்பது அவசியமாகிறது.
மீதித் தொகை வங்கிக் கடன் மூலம் வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழு (SHG) உறுப்பினர்களுக்கான பிரத்யேக சலுகையாக ஒருவருக்கு ₹40,000 வரை தொடக்க மூலதனம் (Seed Capital )உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் எந்த தொழில்களுக்கு கடனுதவி பெறலாம்.. ?
உணவு சார்ந்த தொழில்களுக்கு இதன் கீழ் உதவி பெறலாம்.உதாரணமாக ஊறுகாய் தயாரித்தல்,மசாலா பொடி தயாரிப்பு, மில்லெட் (சிறுதானிய) பொருட்கள், ஜூஸ் தயாரித்தல்,பேக்கரி பொருட்கள்,சிப்ஸ்,தேன்,பால் மற்றும் பால் பொருட்கள்,மீன் மற்றும் இறைச்சி பதப்படுத்தல் போன்ற தொழில்கள் இதில் அடங்கும்.
விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் :
பயனாளர் வயது 18 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும் அல்லது புதியதாக தொடங்க திட்டமிட வேண்டும். தனியாக ஆதார், வங்கி கணக்கு ஆகியவை அவசியம்.ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தனிநபர் மானியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் வழி :
திட்டத்துக்கான அரசு இணையதளத்தில் (PMFME)பதிவு செய்ய வேண்டும்.
தெளிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க வேண்டும்.
அரசுத் திட்டங்கள், வாழ்வாதார மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் சமூகத் தணிக்கை போன்றவற்றை கிராமப்புற அல்லது நகர்ப்புற மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒருங்கிணைப்பாளரான மாவட்ட வள நபர் (DRP)அல்லது மாநில ஒருங்கிணைப்பு அமைப்பின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கி கடன் ஒப்புதல் பெற்ற பின் மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் நன்மைகள் :
தொழிலுக்குத் தேவையான இயந்திரங்கள் வாங்க நிதி உதவி.
பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங் ஆதரவு
அந்தத் தொழிலுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகள்
தரச் சான்றிதழ் மற்றும் பேக்கேஜிங் மேம்பாடு உதவி
தொழிலை விரிவுபடுத்த வங்கிக் கடன் பெற உதவி.
உணவு தொழில் என்பதால் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India FSSAI )பதிவு முக்கியம். மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) இந்திய அரசால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வமான பதிவு மற்றும் சான்றிதழான உத்யம் (Udyam) மற்றும் MSME பதிவு இருந்தால் வங்கி மற்றும் திட்ட அனுமதி செயல்முறை எளிதாகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் இத்திட்டம் பற்றி அறிய அரசு இணையதளம் மற்றும் இ-சேவை மையங்களில் உதவி பெறலாம்..
என்ன நீங்களும் சிறு தொழில் முனைவோராக மாற கிளம்பியாச்சா?