

பாமக தலைவர் அன்புமணி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். 300 பேருந்துகள் தொடக்க விழாவுக்காக வரவழைக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் போக்குவரத்து துறையோ இந்த குற்றச்சாட்டு தவறானது என்று விளக்கம் அளித்துள்ளது.
சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 300 புதிய பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் முடக்கப்பட்டு காத்திருப்பதாக வெளியான குற்றச்சாட்டை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. முதல்வரின் பிறந்த நாளையொட்டி எந்தவித புதிய பேருந்துகளுக்கான தொடக்க நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடவில்லை என்றும் கூறியுள்ளது. இது போன்ற தகவல்கள் முற்றிலும் தவறானது என்றும், புதிய பேருந்துகள் இயக்கப்படுவதற்கான தொடக்க விழா ஏற்பாடுகள் மட்டுமே நடைபெற்று வருவதாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்க விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 புதிய அரசுப் பேருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, எந்தப் பயன்பாடும் இல்லாமல் கடந்த மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். 300 பேருந்துகளுக்காக 900 பணியாளர்களும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என்றும், ஒரு பேருந்தை சென்னைக்கு எடுத்து வந்து எடுத்துச் செல்ல ரூ. 40,000 வரை செலவு ஆவதாகவும், நாகர்கோவில், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 24 நகரங்களிலிருந்து 300 பேருந்துகள் வந்துள்ளன.
ஆனால் திட்டமிட்டது போல் முதலமைச்சரின் பிறந்தநாள் அன்று இந்த பேருந்துகள் இயக்குவதற்கு தொடங்கி வைக்கப்படவில்லை. ஒவ்வொரு பேருந்திலும் 2 ஓட்டுநர்கள், 1 நடத்துனர் என்று சுமார் 900 ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தேவையின்றி பேருந்துகளை இயக்குவதால் எரிபொருள் வீணடிக்கப்படுவதாகவும், மனித ஆற்றல் வீணடிக்கப்படுவதாகவும், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி 3 நாட்களாக அவதிப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதற்கு போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. பேருந்துகள் முடக்கப்பட்டதாகவோ அல்லது இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டதாகவோ கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்று போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. பேருந்துகள் அனைத்தும் வருகின்ற வெள்ளி (மொஹரம்)மிலாடி நபி பண்டிகையையொட்டியும், சனி ஞாயிறு வார விடுமுறைகள் போன்ற தொடர் விடுமுறைகளுக்காக பிற மாவட்டங்களுக்கு இயக்குவதற்காகவே பேருந்துகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த முறை அமைச்சர் ஆய்வு களத்தில் இருந்த போது பண்டிகைகளை ஒட்டி மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்திருந்தனர். அந்த வகையில் மக்களின் தேவைக்கேற்பவும், பயணிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த புதிய பேருந்துகள் அனைத்தும் பிற மாவட்டங்களுக்கும் சென்னையில் இருந்தும் கிளாம்பாக்கத்தில் இருந்தும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இவை அனைத்தும் வருகின்ற 3 நாட்கள் தொடர் விடுமுறைக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்து தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்துகள் முறையாக மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் தொடக்க விழா நிகழ்வுகள் நடைபெற இருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் நிகழ்வு சார்ந்த பணிகளுக்காகவே பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது.