வேலியே பயிரை மேய்ந்த கதை.! பிரபல வங்கியில் சிக்கிய ரூ.7.40 கோடி கள்ளநோட்டுகள்..!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.7.40 கோடி கள்ளநோட்டுகள்!: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட், சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்!
pnb scam
pnb scamCHAT GPT
Updated on

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)பண பெட்டகத்தில் ரூ.7.40 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வந்த செய்திகள் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

சஹாரன்பூர் (உ.பி.), செப் 1 (பிடிஐ) சஹாரன்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பி.என்.பி) பணப் பெட்டகத்தில், சுமார் ரூ.7.40 கோடி முகமதிப்புள்ள கள்ள நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்த நிலையில் இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக மூன்று வங்கி அதிகாரிகள் மற்றும் ஒரு வீட்டுப் பணியாளர் மீது சதர் பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பி.என்.பி வங்கியின் மூத்த தலைமை மேலாளர் நிஷா சிங் தனியார் சேனலில் மூத்த கோட்ட மேலாளர் ரவி குமார் காசே, மற்றும் பணப் பெட்டக மேலாளர்களான சுஷில் சர்மா, அமித் குமார் ஆகியோரை வங்கி இடைநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மேலும் வங்கியின் ஒருங்கிணைப்பு அதிகாரி அருண் குமார் சௌபே அளித்த புகாரில் இந்த மூவரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்ததாக அறியப்படுகிறது.

சஹாரன்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் அபினந்தன் சிங் செய்தியாளரிடம் கூறுகையில், வங்கியின் பணக் காப்பகத்தில் (chest) பணத்தைச் சரிபார்த்தபோது, ​​சுமார் ₹7.40 கோடி மதிப்பிலான "தரமற்ற மற்றும் சந்தேகத்திற்குரிய கரன்சி" இருப்பதை வங்கியின் தணிக்கைக் குழு கண்டறிந்ததாக வங்கி அதிகாரி ஒருவர் காவல்துறையிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகளின் தகவலின்படி பணக் காப்பகத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கிக்குச் செலுத்த வேண்டிய பணத்தை எண்ணியபோது ₹4.3 லட்சம் பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. வங்கி நிர்வாகம் மேற்கொண்ட தணிக்கையில், பல்வேறு முறைகேடுகளும், சுமார் ₹7.40 கோடி முகமதிப்புள்ள கள்ளநோட்டுகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வங்கிப் பரிவர்த்தனைகள், தணிக்கைப் பதிவேடுகள் மற்றும் கண்காணிப்புக் காணொளிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொகை குறைபாடு குறித்து முதலில் பிஎன்பி (PNB)-யின் மீரட் கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் அதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்துவதற்காக சௌபே என்பவர் சஹாரன்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.

உள்விசாரணையின் ஒரு பகுதியாக, பணப் பாதுகாப்பு அறையின் (currency chest) சிசிடிவி (CCTV) காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன; அப்போது, ​​பகுதிநேரப் பணியாளரான விஷால் குமார், பணக்கட்டுகளிலிருந்து பணத்தை எடுப்பது போன்ற காட்சிகள் அதில் பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. திருட்டுச் சம்பவம் தொடர்பாக விஷால் குமார் மீது தனி வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும் விசாரணக்குச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது என்றும் வங்கி விளக்கம். இந்த கள்ளநோட்டுகள் பொதுமக்களின் புழக்கத்திற்கு அனுப்பப்படவில்லை என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

BANK
BANK

இந்த குற்ற சம்பவத்தில் குறிப்பிட்ட வங்கியின் மீது RBI நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிகிறது. வங்கியின் Currency Chest அல்லது வங்கி அனுப்பும் பணக்கட்டுகளில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால், RBI விதிகளின்படி வங்கிக்கு நிதி அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்பாக, கள்ள நோட்டின் முகமதிப்புக்கு இணையான தொகையை மீட்டெடுப்பதுடன், அதே அளவுக்கு 100% penalty விதிக்கப்படும் சூழல்கள் உள்ளதாக தகவல்கள் உள்ளன. அதே சமயம் பணியாளர் அல்லது அதிகாரிக்கு அது கள்ள நோட்டு என்று தெரியவில்லை என்றால், வெறுமனே அந்த நோட்டு வங்கியின் பணத்தில் இருந்ததற்காக BNS கீழ் குற்றவியல் தண்டனை வராது என்றும் இது குறித்து சிபிஐ விசாரணை தான் சரியான உண்மைகளை கண்டறிந்து அதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் வங்கிகளில் தெரிந்தே கள்ள நோட்டை வாடிக்கையாளர்களிடம் கொடுத்தால் BNS பிரிவு 179 கீழ், கள்ள நோட்டை உண்மையானது என்று தெரிந்தும் பயன்படுத்துவது/வழங்குவது போன்ற செயல்களுக்கு ஆயுள் சிறை அல்லது 10 ஆண்டுகள் வரை சிறை + அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தலைமை வங்கிக்கு செலுத்த வேண்டிய தருணத்தில் பணப் பற்றாக்குறையில் துவங்கிய இந்த விவகாரம், பஞ்சாப் நேஷனல் வங்கியின் சஹாரன்பூர் கிளையில் அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்துள்ளது . இல்லையெனில் இந்த கள்ள நோட்டு விவகாரம் வெளி வராமலேயே போயிருக்கும். நமது பணத்தைக் காக்கும் பெரும் பொறுப்பில் இருப்பவர்களே இது போன்ற மோசடிகளை செய்தால் எப்படி வங்கிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் என இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பேராசையால் வீழ்ந்த இங்கிலாந்து: உலகின் முதல் பங்குச்சந்தை ஏமாற்று வித்தை 'சவுத் ஸி பபுள்' வரலாறு!
pnb scam
logo
Kalki Online
kalkionline.com