பேராசையால் வீழ்ந்த இங்கிலாந்து: உலகின் முதல் பங்குச்சந்தை ஏமாற்று வித்தை 'சவுத் ஸி பபுள்' வரலாறு!

South Sea Bubble - பங்குச்சந்தை நீர்க்குமிழி
South Sea Bubble - பங்குச்சந்தை நீர்க்குமிழிAI Image
Updated on

ரலாற்றில் பல்வேறு பொருளாதார நீர்க்குமிழிகள் (Economic Bubbles) அவ்வப்போது நிகழ்ந்துள்ளன.‌ அவை நமக்கு பல்வேறு பாடங்களைக் கற்பிக்கின்றன. அவற்றில் ஒன்றான, உலகின் முதல் பங்குச்சந்தை நீர்க்குமிழியாக கருதப்படும் சவுத் ஸி பபுள் அதாவது தெற்குக்கடல் நீர்க்குமிழி பற்றிப் பார்ப்போம்.

இங்கிலாந்து நாடு 16 ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து பல்வேறு போர்களில் ஈடுபட்டு வந்தது. அதன் காரணமாக அது கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானது. கிபி 1710 ஆகஸ்ட் மாதம் ராபர்ட் ஹார்லி கருவூலத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டார். கடன்களைப் பற்றிய கணக்கெடுத்தபோது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கிட்டத்தட்ட 9 மில்லியன் பவுண்டுகள் கடன் இருந்தன.

ஹார்லி மற்றும் மறைமுகமான வங்கியான ஹாலோ ப்ளேட் ஸ்வார்டு (Hollow Blade Sword) நிறுவனத்தின் செயலாளரான பிளண்ட் இருவரும் சேர்ந்து அரசின் கடன் சுமையைக் கையாள புதிய யுக்தியை உருவாக்கினர். அந்த யுக்திதான் சவுத் ஸி கம்பெனி.

ஹார்லியும் பிளண்ட்டும் சேர்ந்து கடன்களை ஒருமுகப்படுத்தும் முயற்சியைத் தொடங்கினர். அதன்படி, இங்கிலாந்தின் கடனான 9 மில்லியன் பவுண்டுகளை சவுத் ஸி கம்பெனி எடுத்துக்கொள்ளும். கடன் கொடுத்தவர்கள் கடனுக்கு மாற்றாக சவுத் ஸி கம்பெனியின் பங்குகளைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தப் பங்குகளுக்கு வருடாந்திரம் 6% வட்டி அரசால் ஈவுத்தொகையாக வழங்கப்படும்.

இந்த வட்டி விகிதம் சற்று குறைவுதான். ஆனால், கடன் கொடுத்தவர்களைத் திருப்தி படுத்த, தெற்குக் கடல் அதாவது தென் அமெரிக்கா சார்ந்த துறைமுகங்களில் அடிமைகளை விற்க சவுத் ஸி கம்பெனிக்கு ஏகோபித்த உரிமை வழங்கப்பட்டது. எனவே, பங்குகளின் விலையுயர்வு கடன் கொடுத்தவர்களின் சொத்தினை அதிகரிக்கும் என நம்பப்பட்டது. இதில் ஒரு சிக்கல் இருந்தது. தெற்குக் கடல் துறைமுகங்கள் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் இருந்தன.

South Sea Bubble - பங்குச்சந்தை நீர்க்குமிழி
South Sea Bubble - பங்குச்சந்தை நீர்க்குமிழிAI Image

அப்போது இங்கிலாந்து ஸ்பெயினுடன் ஸ்பானிய வாரிசுரிமைப் போரில் இருந்தது.‌ போர் முடிந்து கிபி 1713 இல் உட்ரெசெட் உடன்படிக்கை (Treaty of Utrecht) ஏற்பட்டபோது, சவுத் ஸி கம்பெனிக்கு வருடா வருடம் ஒரே ஒரு கப்பல் மட்டுமே அடிமைகளை விற்க அனுமதிக்கப் பட்டது. எனவே, இந்த விற்பனை பெரிதாக இலாபம் ஈட்டுவதாக இல்லை. பங்குகளின் விலை உயரவில்லை.

கிபி 1714 ஆம் ஆண்டு ஜார்ஜ் 1 அரசராக பதவியேற்றார். அவரது மகன் வேல்ஸ் இளவரசர் (பிற்காலத்தில் ஜார்ஜ் 2) சவுத் ஸி கம்பெனியின் கௌரவ ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். கிபி 1717 ஆண்டு அரசருக்கும் அவரது மகனுக்கும் சண்டை ஏற்பட்டபோது, அரசர் தன்னையே ஆளுநராக நியமித்துக்கொண்டார்.

இது சவுத் ஸி கம்பெனி தோற்காத மிகப்பெரிய நிறுவனம் (Too Big to Fail) என்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தியது. கிபி 1719 ஆம் ஆண்டு ஜாக்கோபைட்ஸ் (Jacobites) என்ற அரசியல் குழு அரசரைத் தூக்கி எறிய செய்த முயற்சி முறியடிக்கப்பட்டபோது, சவுத் ஸி கம்பெனி அதனைப் பெருமளவில் விளம்பரப்படுத்தியது. அரசாங்கம் வலுவாக உள்ளது என்ற தோற்றம் மக்களிடம் உண்டான போது சவுத் ஸி கம்பெனியின் பங்குகள் 100 பவுண்டில் இருந்து 114 பவுண்டுகள் ஆனது.

இதையும் படியுங்கள்:
நண்பரின் காரை இரவல் வாங்கி ஓட்டுகிறீர்களா? விபத்து நடந்தால் இன்சூரன்ஸ் கிடைக்காது..!
South Sea Bubble - பங்குச்சந்தை நீர்க்குமிழி

பங்குகளின் விலையேற்றத்தால் சவுத் ஸி கம்பெனியின் பங்குகளின் மொத்த மதிப்பு மொத்த கடனின் மதிப்பைவிட அதிகமாக ஆனது.

இந்த விலை ஏற்றத்தைப் பயன்படுத்திக் கொள்ள சவுத் ஸி கம்பெனியானது உபரி பங்குகளை விற்று காசாக்கி கொண்டது. இலாபம் ஈட்டாத சவுத் ஸி கம்பெனிக்கு இலாபம் ஈட்ட இது நல்லதொரு முகாந்திரமாக பிளெண்டிற்கு தெரியவே, அவர் அரசாங்கத்தின் மொத்தக் கடன் மதிப்பான 31 மில்லியன் பவுண்டினை சவுத் ஸி கம்பெனி ஏற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்தார்.

சவுத் ஸி கம்பெனி நாடாளுமன்றத்தில் உறுப்பினர் களுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலம் அந்தக் கடனை தனக்கு மாற்றிக்கொண்டது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குகளை வாங்குவதற்கு பணம் கொடுக்கவேண்டாம் என்றும் விற்கும்போது பங்கிற்கான பணத்தைக் கொடுத்தால் போதும் என்று சலுகைகளைப் பிளண்ட் அறிவித்தார்.

கிபி 1720 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதன் மதிப்பு 330 பவுண்டுகளானது. ஏப்ரல் மாதம் அது மறுபடி 310 பவுண்டுகளாக குறைந்தபோது, பிளண்ட் பங்கின் சந்தை விலையில் 20% பணத்தைக் கட்டினால் போதும் மீதமுள்ள பாக்கியை இரண்டு மாதங்களுக்கொரு முறை செலுத்தலாம் என்று சலுகை அறிவித்தார்.

இதன் காரணமாக ஒரு பங்கு வாங்க முடிந்தவர்கள், தங்களால் வாங்க இயலாத ஐந்து மடங்கு பங்குகளை வாங்கினார்கள். விலை ஏறும்போது ஒவ்வொரு இரண்டு மாதமும் அதனை விற்று அதிக இலாபத்தை அடைய திட்டமிட்டனர்.

இதையும் படியுங்கள்:
நண்பரின் காரை இரவல் வாங்கி ஓட்டுகிறீர்களா? விபத்து நடந்தால் இன்சூரன்ஸ் கிடைக்காது..!
South Sea Bubble - பங்குச்சந்தை நீர்க்குமிழி

இது பங்கின் மதிப்பினை 360 பவுண்டுகள் ஆக்கியது. மொத்தக் கடனும் சவுத் ஸி கம்பெனிக்கு கை மாறியபொழுது பங்கின் மதிப்பானது 550 பவுண்டுகள் ஆனது. மறுபடி, அது 480 பவுண்டுகளாகக் குறைந்தபோது, பிளண்ட் மற்றொரு திட்டத்தை அறிவித்தார். அதாவது சவுத் ஸி கம்பெனி பங்குகளை வாங்க 3000 பவுண்டுகள் வரை சவுத் ஸி கம்பெனியே கடன் கொடுத்தது.

சவுத் ஸி கம்பெனியின் இத்தகைய அசுர பங்குச் சந்தை வளர்ச்சியைக் கண்டு, பல்வேறு புதிய நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பணம் திரட்டத் தொடங்கின. இதனால் சவுத் ஸி கம்பெனிக்கு வரும் முதலீடு குறைய ஆரம்பித்தது. அரசரின் ஒப்புதல் இல்லாத நிறுவனங்கள் பங்குச் சந்தையில் இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கும் பபுள் சட்டம் (Bubble Act) என்ற ஒன்றை சவுத் ஸி கம்பெனி பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது.

அதன் காரணமாக, அங்கீகாரத்தை இழந்த நிறுவனங்களில் பணத்தை இழந்தவர்கள் பணத்தைப் பெறுவதற்கு சவுத் ஸி கம்பெனியின் பங்குகளை விற்கத் தொடங்கினர்.

அப்பொழுதும் கூட சவுத் ஸி கம்பெனியின் பங்குகள் விலையானது குறையவில்லை. 830 பவுண்டுகளைத் தொட்டது. சவுத் ஸி கம்பெனியின் மொத்த மதிப்பானது 300 மில்லியன் பவுண்டுகளைத் தொட்டது. இங்கிலாந்தின் மொத்த பொருளாதாரத்தைவிட அதிகமான மதிப்பு கொண்டிருந்தது. பிளண்ட் ஒரு பங்கு ஆயிரம் பவுண்டுகள் என புதிய பங்குகளை விநியோகம் செய்தார்.

பங்குகளின் விலை இன்னும் அதிகரித்தது. அப்போது, பல ஆரம்ப கால முதலீட்டாளர்கள் இதுதான் சமயமென்று வெளியேறினர். பங்கின் விலையை அதிகரிக்க பிளண்ட் பங்குகளுக்கு 30% ஈவுத்தொகை தரப்போவதாக அறிவித்தார். அடுத்த 10 ஆண்டுகளில் அது 50% என அதிகரிக்கும் என்று கூறினார்.‌ இப்பொழுது மக்களின் சந்தேகமானது அதிகரித்தது.

இதனை வழங்குவதற்கு சவுத் ஸி கம்பெனி வருடா வருடம் 15 மில்லியன் பவுண்டுகள் பணம் ஈட்டவேண்டும்.‌ அதாவது, இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால்பங்கு.

இதன் காரணமாக, செப்டம்பர் நடுவிலேயே 150 பவுண்டிற்கு பங்கின் விலை பட படவென இறங்கியது. மூன்று வாரங்களுக்கு முன்புதான் அது ஆயிரம் பவுண்டுகளாக இருந்தது. இதனால் பலர் திவால் ஆயினர். இந்தச் சமயத்தில் ராபர்ட் வால்போல் (எதிர்காலத்தில் பிரதமராக ஆனவர்) இத்தகைய பங்குச் சந்தை சார்ந்த பைத்தியக் காரத்தனத்தை எதிர்க்கும் மக்களின் பிரதிநிதியானார்.

சவுத் ஸி கம்பெனியின் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட நபர்கள் பெருமளவில் போராட்டங்கள் நடத்தினர். ராபர்ட் வால்போல் பேங்க் ஆப் இங்கிலாந்து மற்றும் கிழக்கிந்திய கம்பெனி சவுத் ஸி கம்பெனியின் பங்குகளை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்தார். மக்கள் சவுத் ஸி கம்பெனியிடம் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இது சம்பந்தமாக நாடாளுமன்ற விசாரணைக் குழு உருவாக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

நிதி நிறுவனங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய மக்களின் பிரதிநிதிகளே மக்களின் பணத்திற்கு எதிராக செயல்படும் பொழுது எத்தகைய விளைவை சந்திக்க நேரிடும் என்பது சவுத் ஸி கம்பனியின் மூலம் தெரியவருகிறது. அடுத்தபடியாக எந்த ஒரு முதலீட்டிற்கும் அதற்கான உள்ளடங்கிய விலை என்று உண்டு. அதனைத்தாண்டி வாங்கும் பொழுது அது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

இதையும் படியுங்கள்:
30 வயசுக்கு மேல முதலீடு செஞ்சா இவ்ளோ லாபமா.. உங்களுக்கு யாரும் சொல்லாத உண்மை!
South Sea Bubble - பங்குச்சந்தை நீர்க்குமிழி

இங்கு சவுத் ஸி கம்பெனி பெரியதொரு பணம் ஈட்டாத பொழுதும் அதில் மக்கள் முதலீடு செய்ததால் அது பெரும் நஷ்டத்தில் கொண்டு விட்டது. பரவலாக முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தையும் இந்த சவுத் ஸி கம்பெனியின் பொருளாதார நீர்க்குமிழி தெரிவிக்கிறது.

இந்தப் பதிவை வாசிப்பதன் மூலம், பங்குச்சந்தையின் போலி விளம்பரங்களையும், செயற்கையான விலை ஏற்றங்களையும் மிக எளிதாக அடையாளம் காணும் கூர்மையான நிதிப் பார்வையை நீங்கள் பெறுவீர்கள். உங்களின் கடின உழைப்பின் வருவாயை ஆபத்தான முதலீடுகளில் இழக்காமல் பாதுகாக்கவும், சந்தையின் ஆபத்துகளை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கையோடு செயல்படவும் தேவையான மிக முக்கிய வரலாற்றுப் பாடம் உங்களுக்குக் கிடைக்கும்.

இந்தப் பதிவை வாசிப்பதன் மூலம், பங்குச்சந்தையின் போலி விளம்பரங்களையும், செயற்கையான விலை ஏற்றங்களையும் மிக எளிதாக அடையாளம் காணும் கூர்மையான நிதிப் பார்வையை நீங்கள் பெறுவீர்கள். உங்களின் கடின உழைப்பின் வருவாயை ஆபத்தான முதலீடுகளில் இழக்காமல் பாதுகாக்கவும், சந்தையின் ஆபத்துகளை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கையோடு செயல்படவும் தேவையான மிக முக்கிய வரலாற்றுப் பாடம் உங்களுக்குக் கிடைக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com