தவெக கட்சியின் கட்சி மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக காவல்துறை 21 கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, சின்னம் ஆகியவை சமீபத்தில் வெளியிடப்பட்டன. இவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனையடுத்து தவெக கட்சி அடுத்து மாநாட்டிற்கு தயாராகி வருகிறது. அதற்கான இடத்தையும் தேர்வு செய்தது.
தவெக கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரத்தில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இந்த மாநாடு வரும் 23ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அனுமதிக் கேட்டு, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் , விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டுக் கடிதம் கொடுத்தனர்.
இதனை ஆய்வு செய்த தவெக கட்சிக்கு காவல்துறை 21 கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் இந்த கேள்விகளுக்கு ஐந்து நாட்களில் பதில் சொல்லும்படியும் தெரிவித்துள்ளது.
மாநாட்டில் கலந்துக்கொள்ள வருபவர்களுக்குத் தேவையான பார்கிங் வசதி, கழிவறை, பாதுகாப்பு நடவடிக்கைகள். வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் மாநாட்டிற்கு வருகைப் புரிந்தால் குடிநீர் வசதி, மருத்துவம் பார்க்க ஆம்புலன்ஸ் வசதி எங்கு செய்யப்படுகிறது உட்பட 21 கேள்விகளை எழுப்பி விழுப்புரம் டி எஸ் பி பார்த்திபன் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுசெயலாளர் அனந்த்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
இந்த கேள்விகளுக்கு ஐந்து நாட்களில் பதிலளிக்க வேண்டுமென்றும், முறையான பதில் வழங்கும் பட்சத்தில் மட்டுமே மாநாடு நடத்த அனுமதி வழங்கப்படும் என்று விழுப்புரம் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒருவேளை காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்றால், கட்சி மாநாட்டை நடத்தும் தேதி தள்ளிப்போகும் என்றும் சொல்லப்படுகிறது. அதற்காக விஜயின் ஜோதிடரை புஸ்ஸி ஆனந்த் சந்தித்து பேசியுள்ளாராம். ஒருவேளை அனுமதி கிடைக்கவில்லை என்றால், அடுத்தாண்டு ஜனவரி மாதம் மாநாடு நடத்தப்படும். ஏனெனில், அடுத்த மூன்று மாதங்கள் மழைக்காலம் என்பதால், அப்போது மாநாடு நடத்துவது சரியாக இருக்காது என்று விஜய் மறுப்புத் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.