காவல்துறை அதிகாரி வெள்ளத்துரை சஸ்பெண்டும் வாபஸும்: பின்னணிதான் என்ன?

ADSP Velladurai
ADSP Velladurai

மிழ்நாடு காவல் துறையில் பணியாற்றிய ஏடிஜிபி வெள்ளத்துரை என்றாலே பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும். காரணம், தவறு செய்தவர்களை என்கவுண்டர் செய்வதில் இவர் வல்லவர். இவர், நேற்று வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவணக் காப்பக ஏடிஎஸ்பியாக பணியில் இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று தனது பணியிலிருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா இவரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்)  செய்து உத்தரவிட்டு இருந்தார். இந்த நடவடிக்கையை தாம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாகவும், தம் மீது எந்தத் தவறும் இல்லை எனவும் ஏடிஜிபி வெள்ளத்துரை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது ஏடிஜிபி வெள்ளத்துரை நிபந்தனையுடன் ஓய்வு பெற தமிழ்நாடு அரசு உள்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது காவல் துறையில் பெரும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

சரி, யாருதாங்க இந்த காவல் அதிகாரி வெள்ளத்துரை? இவருடைய ஆதி அந்தம்தான் என்ன என்பதை சுருக்கமாகப் பார்க்கலாம்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டைச் சேர்ந்தவரான வெள்ளத்துரை 1997ல் உதவி ஆய்வாளராகத் தேர்வாகி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் தனது பணியைத் தொடங்கினார். 1998ல் திருச்சி பாலக்கரை எஸ்.ஐ.யாகப் பணியாற்றியபோது, ரவுடி கோசி.ஜானை என்கவுன்டர் செய்தார். அதைத் தொடர்ந்து, 2003ல் சென்னையைக் கலக்கி வந்த பிரபல ரவுடி அயோத்திகுப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்தான் இந்த வெள்ளத்துரை. அதேபோல், 2004ல் சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்கும் அதிரடிப்படைக் குழுவில் இடம் பெற்ற இவர், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து 2 பதவி உயர்வுகள் பெற்று டிஎஸ்பியாக பதவியேற்றார்.

தொடர்ந்து, மதுரையில் வழிப்பறி மற்றும் திருட்டில் தொடர்புடைய கவியரசு, முருகன் ஆகியோரை வெள்ளத்துரை தலைமையிலான போலீஸார் பிடிக்க முயன்றபோது, எதிர்தாக்குதல் நடத்தி, ஆயுதங்களுடன் தப்ப முயன்றனர். எனினும் இருவரும் என்கவுன்டர் செய்யப்பட்டனர். 2012ல் மதுரையில் உதவி ஆணையராகப் பணிபுரிந்தபோது வரிச்சியூர் செல்வம் போன்ற ரவுடிகளை ஓடுக்கினார். இப்படித்தான் தமிழ்நாடு காவல்துறையில், ‘என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்’ எனப் பெயர் எடுத்தார் வெள்ளத்துரை. அதேபோல், வெள்ளத்துரை பணியில் இருந்த காலத்தில் 12க்கும் மேற்பட்ட என்கவுன்டர்கள் தொடர்பான சர்ச்சைகளும் எழுந்தன.

கூடுதல் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்ற வெள்ளத்துரை ராமநாதபுரம் மதுவிலக்கு பிரிவில் 2 ஆண்டுகள் பணியாற்றினார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டப் பஞ்சாயத்து, மாமூல் வசூலை தடுக்கவும், ரவுடிகளை ஒடுக்கவும் ரவுடிகள் ஒழிப்பு சிறப்புப் படை கூடுதல் எஸ்.பி.யாக 2022ல் நியமிக்கப்பட்ட அவர், கடைசியாக திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை குற்றப் பதிவேடு பிரிவில் பணியாற்றினார்.

சரி, இவர் ஏன் பணி ஓய்வுக்கு ஒருநாள் இருக்கும்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்றால், கடந்த 2013ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் ரவுடி கொக்கி குமார் என்பவர் காவல் நிலைய கஸ்டடியில் உயிரிழந்தது சம்பந்தமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இதில் வெள்ளதுரைக்கும் சம்பந்தம் இருப்பதாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையின் இறுதி அறிக்கை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை விரைவில் நீதிமன்றத்துக்கு வர உள்ளது. இந்த நிலையில், வழக்கு இன்னும் முடிவடையாத நிலையில் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வெள்ளத்துரையை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்:
மரண தண்டனை பட்டியலில் ஈரான் முதலிடம்… ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை விதித்த சவுதி!
ADSP Velladurai

வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே, நிபந்தனைகளுடன் அது திரும்பப் பெறப்பட்டுள்ளது. அந்த நிபந்தனையில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், வெள்ளத்துரை சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குகளில் மொத்தம் 5 லட்ச ரூபாய் பிடித்தம் செய்யப்படும் எனவும், ஓய்வுக்குப் பிறகு அரசு வழங்கும் பண பலன்களில் 5 லட்ச ரூபாய் பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது மாநில மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையின் பெயரில் எடுக்கப்படும் நடவடிக்கை எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எது எப்படியோ, ரவுடிகளின் அட்டகாசத்தை என்கவுண்டர் என்ற பெயரில் ஒழித்துக்கட்டிய ஒரு காவல் அதிகாரியின் துப்பாக்கிக்கு நேற்று ஓய்வு கிடைத்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com