

வீட்டு சிலிண்டர்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட நூற்றுக்கணக்கான எரிவாயு சிலிண்டர்களை அதிரடி சோதனைகள் மூலம் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தெலுங்கானாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலிண்டர்களும், உத்தரப்பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட திருட்டு சிலிண்டர்களும் மீட்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் தடையின்றி விநியோகம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு சிலிண்டர் புக் செய்த பிறகு அடுத்த சிலிண்டர் புக் செய்வதற்கு 25 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு காரணமாக கள்ளச் சந்தையில் சிலிண்டர் விற்பனை அதிகரித்துள்ளது. தென் மாவட்டங்களில் கள்ளச் சந்தையில் கேஸ் சிலிண்டர் விற்கப்படுவதை தடுக்க உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் அதிரடி சோதனைகள் நடத்தப்படுகின்றன. சிலிண்டருக்கான தட்டுப்பாடுகள் நிலவி வரும் சூழ்நிலையில் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இதையடுத்து தென் மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் குடிமை பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வுத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்படுகின்றன.
ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி பகுதிகளில் வீட்டு பயன்பாட்டுக்கான 6 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் உணவகத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 11 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இந்த சிலிண்டர் தட்டுப்பாடு அசௌகரித்துக்கு ஒத்துழைப்பு வழங்கினால் விரைவில் நிலைமை சீரடையும் என்றும், கேஸ் சிலிண்டர்களை பதுக்கினால் எஸ்மா சட்டத்தில் மூன்று மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.