எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க? ‘இ-சலான்’ அனுப்பி புதுவித மோசடி..!

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக போலி இ-சலான் மூலம் மோசடி நடப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
Fake E-Challan
Fake E-Challan
Published on

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள சூழலில், அது சார்ந்த சைபர் கிரைம் குற்றங்களும், மோசடிகளும் அதிகரித்துள்ளன. ஆன்லைன் டிரேடிங், பகுதி நேர வேலைவாய்ப்பு, டிஜிட்டல் அரெஸ்ட், முத்ரா லோன் என, பல வகையில் மோசடி நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.

இவ்வாறு நடக்கும் மோசடிகள் குறித்து மக்களிடையே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு மோசடி குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால், அதற்குள் மோசடி நபர்கள் அடுத்த மோசடியை அரங்கேற்றத் தொடங்கி விடுகின்றனர். தற்போது, சமீப காலமாக புதுவித மோசடி ஒன்று நடக்கிறது.

சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிகளை மீறுவதை கண்காணிக்க சாலையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் சாலை விதிகளை மீறும் வாகனங்களுக்கு ஆன்லைன் வழியில் போலீசார் அபராதம் விதித்து, 'இ சலான்' வாகன ஓட்டிகளின் மொபைல் எண்ணிற்கு அனுப்புகின்றனர். இத்தகைய சூழலில் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மோசடிக்காரர்கள் ஆதாயம் ஈட்டி வருகின்றனர்.

அந்த வகையில் போக்குவரத்து விதிமீறல் இ-சலான் மோசடி வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது. வாட்ஸ்-அப் தகவலில் ஒரு செயலியில் கூறப்படும் ஒரு ஏ.பி.கே. கோப்புக்கான லிங்க் வருகிறது. லிங்க் மூலம் செயலி நிறுவப்பட்டவுடன் வங்கி தொடர்பான தகவல்கள் உள்பட உங்களின் தனிப்பட்ட விவரங்களை திருட வடிவமைக்கப்பட்ட போலி இணையதளம் இணைப்பிற்கு வழிவகுக்கிறது.

மேலும், மோசடி கும்பல் அனுப்பும் குறுஞ்செய்தியும், அரசு தரப்பில் அனுப்பும் உண்மையான குறுஞ்செய்தியும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருக்கும். காவல்துறை அனுப்பும் உண்மையான குறுஞ்செய்தியில் அபராத ரசீது லிங்க்குகள் (gov.in) என்றே முடிவடையும் என்றும் (.in) என மட்டும் முடிவடையும் லிங்க்குகள் போலியானவை என காவல்துறை விளக்கமளித்துள்ளனர். மேலும் போலியான ரசிது பெற்றால் அது குறித்த தகவலை காவல் துறையிடம் தெரிவிக்குமாறும், அரசின் உண்மையான இணையத்தை சரியாக கவனித்து அதில் அபராதத்தை செலுத்துமாறு காவல் துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி அரசின் அதிகாரப்பூா்வ தளங்களில் மட்டுமே அபராதம் தொடர்பான தகவல்களை சரிபார்க்க வேண்டும். மேலும் தெரியாத எண்களில் இருந்து வரும் ஏ.பி.கே. கோப்பு, பிற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! வாகன அபராதத்தில் இருந்து 50 சதவீதம் தள்ளுபடி பெற அரிய வாய்ப்பு..!
Fake E-Challan

தீங்கு விளைவிக்கும் செயலியை நிறுவுவது மோசடி செய்பவர்களுக்கு உங்கள் செல்போனின் முழுமையான கட்டுப்பாட்டை வழங்குவது போல் ஆகும். ஓ.டி.பி. உள்ளிட்ட விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம். இணை மோசடியால் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் எண்ணை அழைக்கலாம். அல்லது https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com