பாஜகவுக்கு வலை விரிக்கும் சந்திரபாபு நாயுடு!
அரசியல் களத்தில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுவின் சமீபத்திய பேச்சு.
ஆந்திர சட்டமன்ற தேர்ந்த அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன் ஏற்பாடுகள் தற்போதே விறுவிறுப்பாக நடைபெறத் தொடங்கியுள்ளது. குறிப்பாக விஜயவாடாவில் நடைபெற்ற என்டிஆரின் நூற்றாண்டு தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு புகழ்ந்து பேசியது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையை சமீபத்தில் தொலைகாட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியின் திட்டங்களை புகழ்ந்து பேசியுள்ளார். குறிப்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேச கட்சி இடம்பெறுமான என்ற கேள்விக்கு, அதற்கு காலம்தான் பதில் சொல்லும் என சூட்சமாக தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் இந்த கருத்து தற்போது ஆந்திர அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக கடந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலின்போது சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆந்திராவின் முதலமைச்சராக ஓய்எஸ்ஆர் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக தேர்வுச்செய்யப்பட்டார்.
சட்டமன்ற தோல்விக்கு பிறகு அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கி சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சியை வலுப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டுவருகிறார். ஆனால், மக்களிடம் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் கட்சிக்கு பெரும் ஆதரவு உள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காக திட்டமிட்டு, அதற்கான அரசியல் காய்களை நகர்த்திவருகிறார்.
அதன் முதல் கட்டமாக, பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணுடன் இரண்டு மணிநேரம் சந்தித்தி பேசினார் சந்திரபாபு நாயுடு. இச்சந்திப்பின்போது வரும் சட்டமன்ற தேர்தலில்போது கூட்டணி அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பவன் கல்யாணுடனான சந்திப்பு சந்திரபாபு நாயுடுவை மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இந்நிலையில்தான், பிரதமர் மோடியின் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சி பாதைக்கு அடித்தளமிட்டுள்ளது என்றும், மோடியின் காலகட்டத்தில்தான் நாட்டின் அங்கீகாரம் சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது என்றும் புகழ்ந்துள்ளார் சந்திரபாபு நாயுடு. இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை தெலுங்கு மக்கள் உணர உதவுவேன் என தெரிவித்த சந்திரபாபு நாயுடு அதேநேரம் மத்திய பாஜக அரசு ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து சுமூக தீர்வு காணவேண்டும் என பாஜகவுக்கான ஆதரவு குரலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளார் சந்திரபாபு நாயுடு.