எடப்பாடி அ.தி.மு.க. அணி, பா.ஜ.க.வால் அங்கீரிக்கப்பட்டுவிட்டதா?

எடப்பாடி  அ.தி.மு.க. அணி, பா.ஜ.க.வால் அங்கீரிக்கப்பட்டுவிட்டதா?

ருங்கிணைப்பாளர்கள் இல்லை, ஒற்றை தலைமைதான்” என்ற விஷயத்தில் கருத்தொற்றுமை இல்லாமல் கட்சி இரண்டாக பிளந்தபின்னர் “இரு தரப்பும்  இணைந்து வந்தால்தான் பேசமுடியும்” என்று  கண்டிப்பு காட்டிக்கொண்டிருந்த பா.ஜ.கா.வின் டெல்லி தலைமை நேற்று எடப்பாடியின் தலைமையை அங்கீகரித்து ஒரு சிக்னல் அனுப்பியிருப்பது தமிழக அரசியலில் புதிய அலைகளை உருவாக்கியிருக்கிறது.

 ஜூலை 11-ல் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடியின் பதவியை, டெல்லி தலைமை இதுவரை ஏற்றுக்கொள்ளாமல்தான் இருந்தது. அதேபோல, பொதுக்குழு முடிந்து நான்கு மாதங்களில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தாததால், அவரின் பதவி காலாவதியாகிவிட்டது என்று பன்னீர் தரப்பினர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.  ஆனால், கட்சி நிர்வாகிகளும் பெருபான்மை தொண்டர்களும் என்னுடன் என்பதால்  நாங்கள்தான் அ.தி.மு.க. என்று அறிவித்த பழனிச்சாமி அதை வலுப்படுத்தும் விதமாக காய்களை நகர்த்திக்கொண்டிருந்தார். அவர் அணியின் இரண்டாம் கட்ட தலைவர்கள்  பா.ஜ.க.விற்கு  எதிரான நிலையெடுத்து பேச ஆரம்பித்திருந்தனர்.

தொடர்ந்து  டெல்லியில் தம்பித்துரை தன் செல்வாக்கால் பா.ஜ.க. தலைவர்களிடம் லாபி செய்து கொண்டிருந்தார். இந்த இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி அ.தி.மு.க-வை பலவீனப்படுத்த முயன்றால், அதனால் உங்களுக்குத்தான் பெரும் பாதிப்பு’ என்று கூறி, தேர்தல் புள்ளிவிவரங்களையும், ஓ.பி.எஸ்-ஸின் செல்வாக்கு குறித்த புள்ளிவிபரங்களை டெல்லிக்குக் கொடுத்தார் . இந்த நிலையில் எடப்பாடியின் இந்த  சிக்னலைப் புரிந்துகொண்ட டெல்லி தலைமை, எடப்பாடியை அங்கீகரிக்க தீர்மானித்திருக்கிறது. வாய்ப்பாக அமைந்த து,  ஜி.20  உச்சி மாநாடு. உள்ளூர் அரசியலில் எங்கிருந்து வந்தது ஒரு உலக நாடுகளின் உச்சி மாநாடு

ஜி20 அமைப்பின் விதிமுறைகளின்படி, இந்த முறை ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கிறது. இதற்கான மாநாடுவரும் ஆண்டு நடைபெறவிருக்கிறது. அதன்படி, இந்த மாநாட்டைச் சிறப்பாக நடத்துவதற்காக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டிச.5-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. முன்னதாக, அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுக்கும், முக்கியக் கட்சித் தலைவர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

அதன்படி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. அதில் முக்கியமான விஷயம்  அந்த அழைப்பு கடிதத்தில் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி” என்று குறிப்பிட்டிருப்பது தான் பா.ஜ.க.வின் சிக்னல். “விஷயம் வழக்கில் இருக்கிறது. ஒன்றிணைந்து வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டிருந்த பா.ஜ.க. எடப்பாடியை அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர்  என்று அங்கீகரித்திருக்கிறது.

எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்?

எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வை ஏற்றுக்கொள்வதில் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-விலேயே மாறுப்பட்ட கருத்து இருக்கிறது. அ.தி.மு.க-வைச் செயலிழக்கவைத்து, தன்னை முன்னிலைப்படுத்த தமிழக பா.ஜ.க, தலைமை நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து தமிழக பா.ஜ.க தலைவர்கள் டெல்லிக்குச் சில தவறான தகவல்களைக் கொடுத்துள்ளனர்.

“உட்கட்சிப் பிரச்னையை மையமாக வைத்து இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி, அ.தி.மு.க-வை 10 சதவிகித வாக்குகளுக்குள் சுருக்கிவிடலாம். தே.மு.தி.க., த.மா.கா., பா.ம.க., அ.ம.மு.க., பன்னீர் அணி, இதர கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்து தேர்தலை நாம் சந்திக்கலாம்“ என்பதுதான்  தமிழக பா.ஜ.க.வின் கருத்து. இது குறித்து எடப்பாடியிடம்  எந்த விளக்கமும் கேட்காமல், பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் சந்தித்துப் பேச எடப்பாடி முயன்றபோதெல்லாம், அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லை.

ஆனால்,  நாமக்கல்லில் கடந்த  மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் தொண்டர்கள் மத்தியில் ‘அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி’ என எடப்பாடி சூளுரைத்தார்.

இது குறித்து அமித்ஷாவிற்கு கிடைத்த உளவுத்துறை அறிக்கை  தொடர்ந்து நடந்த கூட்டங்களில் எடப்பாடிக்கு பெருகிவரும் கட்சியினர் ஆதரவு  எல்லாவற்றையும் புரிந்து கொண்ட பா.ஜ.க. மேலிடம் இந்த சிக்னலை அனுப்பியிருக்கிறது.  ஜி 20 உச்சி மாநாட்டால் உறுப்பு நாடுகளுக்கு  பலன்கள் கிடைக்கப் போகிறதோ இல்லையோ எடப்பாடியின் அ.தி.மு.க.விற்கு பெரும்பலம் கிடைத்திருக்கிறது. 

“இடைக்காலப் பொதுச்செயலாளர்” என்று குறிப்பிட்டு, ஒன்றிய அரசு, எடப்பாடிக்கு கடிதம்  எழுதியிருப்பது தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்து வரப்போகும் பல புதிய ட்விஸ்ட்களின்  தொடக்கம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com