கர்நாடக தேர்தல்: அதிர்ச்சி ஏற்படுத்திய ஷெட்டர் வீட்டிலிருந்த படங்கள்!
2012-13 கால கட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆளும் கட்சியாக இருந்தது. அப்போது அந்தக் கட்சியைச் சேர்ந்த ஜெகதீஷ் சிவப்பா ஷெட்டர். முதலமைச்சராகப் பதவி வகித்தார். கர்நாடக அரசியலில் மிகப் பெரிய அளவில் வாக்கு வங்கி கொண்ட லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் ஷெட்டர்.
அதன் பிறகு அவர் கர்நாடக சட்ட சபையில் எதிர்க் கட்சித்தலைவராக இருந்திருக்கிறார். அதற்கு முன்னதாக, கர்நாடக சட்டசபையின் சபாநாயகராகவும் அவர் பதவி வகித்து இருக்கிறார். 2019ல், எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில், தொழில் துறை அமைச்சராக இருந்தவர் இவர்.
இவருக்கு சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாதாமி ஆகும். இவரது அப்பா அந்தக் காலத்தில் பா.ஜ.க.வின் முந்தைய வடிவமான ஜன சங்கத்தில் தீவிரமாகப் பணியாற்றியவர்.
வரும் மே 10ஆம் தேதி நடக்கவிருக்கும் மாநில சட்டசபைத் தேர்தலில் முந்தைய எம்.எல்.ஏ.க்கள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு மறுபடியும் தேர்தலில் போட்டி இடுவதற்கு பா.ஜ.க. தலைமை டிக்கெட் கொடுக்க மறுத்துவிட்டது.
அப்படி டிக்கெட் மறுக்கப்பட்டவர்களில் ஷெட்டரும் ஒருவர். இது தனது அரசியல் வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என்று அவர் நினைத்தா. தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை செய்த பிறகு, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அடுத்து, பா.ஜ.க.வை விலகுவதாகவும் அறிவித்தார்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் ஷெட்டர். 1994 ஆம் ஆண்டு முதல் பா.ஜ.க. சார்பில் அவர் போட்டியிட்டு வென்ற ஹூப்ளி-தார்வாட் மத்திய தொகுதியில், இப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட அவருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதகளாகவே மீடியா கவனத்தை ஈர்த்துவரும் ஷெட்டர் குறித்த சமீபத்திய தகவல் ஒன்று பா.ஜ.க. வட்டாரத்தில் ஆச்சர்யத்தையும், காங்கிரஸ் தரப்பில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஷெட்டரின் வீட்டில் இருக்கும் அவரது அலுவலக அறையின் சுவரில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரது படங்களும் கம்பீரமாக மாட்டப்பட்டுள்ளன.
இது, கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்காரர்களும், ஊடகத்தினரும் ஷெட்டரிடம், “இன்னமும் ஏன் மோடி, அமித்ஷா படங்களை அகற்றாமல் வைத்திருக்கிறீர்கள்?” என்று நேரடியாகவே கேட்டபோது, “பா.ஜ.க. எனக்கு அநீதி இழைத்தாலும் கூட, அவர்கள் இருவரது படங்களையும் நான் அகற்ற விரும்பவில்லை” என்று அவர் பதில் அளித்திருக்கிறார்.
“தானும் ஜெயித்து, ஒரு வேளை பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்படி ஆனால், தாய்க்கட்சிக்குத் திரும்பும் ஐடியாவில் இருப்பாரோ மனிதர்?