எடப்பாடி பழனிசாமி மீது காவல்துறை வழக்குப் பதிவு ! அதிமுகவினர் நாளை போராட்டம்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவினர் இது குறித்து 'தற்போதைய முதல்வர் ஆலோசனையின் பேரில் எங்கள் தலைவர் எடப்பாடி மீது திட்டமிட்டுப் பொய் வழக்குப் போட்டு உள்ளனர். இது காவல்துறையால் ஜோடிக்கப்பட்டது" என்றும் கூறியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி மீது காழ்ப்புணர்ச்சியுடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதைக் கண்டித்தும், தமிழக அரசின் போக்கைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இதேபோல் ராஜேஸ்வரன் என்பவரும் முகநூலில் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய போது, அவரது நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் தன்னை தாக்கி செல்போனை பறித்ததாகவும், எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பேரில் அவரது உதவியாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தகாத வார்த்தைகளால் பேசி தன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி புகார் அளித்தார்.

எடப்பாடி பழனிசாமி, அவரது நேர்முக உதவியாளர் கிருஷ்ணன், எம்.எல்.ஏ செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதிமுக தரப்பு அளித்த புகாரின் பேரில் ராஜேஸ்வரன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார். அப்போது விமான நிலைய பேருந்தில் பயணித்த போது உடன் வந்த சக பயணி ராஜேஸ்வரன் என்பவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசி முகநூலில் நேரலை செய்தார்.

இக்காட்சியைப் பார்த்த எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட நபரின் செல்போனை பறித்து அவரை விமான நிலைய வளாகத்தில் சட்டை பிடித்து இழுத்து வந்தார். ராஜஸ்வரனை அங்கிருந்து அதிமுகவினர் சிலர் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராஜன் செல்லப்பா சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் உதவி ஆணையர் சசிகுமாரிடம் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக, மதுரை கோரிப்பாளையத்திலுள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் கூட்டாக இணைந்து ஆலோசனை நடத்தி செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள், ‘இந்த விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து, திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் மதுரையில் பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com