கர்நாடகத்தில் தொடரும் வாரிசு அரசியல்!
கர்நாடகத் தேர்தலில் அரசியல்கட்சித் தலைவர்களின் வாரிசுகள் போட்டியிடுவது தொடர்கிறது. ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்த 7 அரசியல் குடும்பத்தினர் ஒன்றுக்கும் மேலான வேட்பாளர்களை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது. காங்கிரஸில் நான்கு குடும்பத்தினரும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் இரண்டு குடும்பத்தினரின் வாரிசுகளும் அரசியல் களத்தில் குதித்துள்ளனர். பா.ஜ.க.வில் தந்தை அல்லது கணவருக்கு பதிலாக 6 வேட்பாளர்களுக்கு தேர்தல் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் ஒரே குடும்பத்தில் தந்தை, மகன், தந்தை, மகள், மருமகன் மற்றும் சகோதர்ர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். பெல்லாரியில் ரெட்டி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் களத்தில் குதித்துள்ளனர். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.
பெல்லாரி சிட்டி தொகுதியில் எம்.எல்.ஏ. சோமசேகர ரெட்டி போட்டியிடுகிறார். அவரது மூத்த சகோதரரும் எம்.எல்.ஏ.வுமான கருணாகர ரெட்டி ஹரப்பனஹள்ளி தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். மற்றொரு சகோதரரும் முன்னாள் அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டி, பாஜ.க.விலிருந்து விலகி கல்யாண ராஜ்ய பிரகாதி கட்சியைத் தொடங்கி கங்காவதி தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவருடைய மனைவி அருணா லெட்சுமி பெல்லாரி சிட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த ஆண்டு எனது சகோதரரையே எதிர்த்துப் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவெகெளடவின் மகன்களான ஹெச்.டி.குமாரசாமி சென்னப்பட்னா தொகுதியிலும், ஹெச்.டி.ரேவண்ணா ஹொலினஸிபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். குமாரசாமியின் மகனும் தேவெகெளட பேரனுமாகிய நிகில் குமாரசாமி ராமநகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் இப்போது எம்.எல்.ஏ.வாக அவரது தாயார் அனிதா இருக்கிறார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்.பி.யாக இருக்கிறார். அவரது இளைய மகன் சூரஜ் எம்.எல்.சி.யாக உள்ளார்.
பெலகாவி மாவட்டத்தில் ரமேஷ் மற்றும் பாலச்சந்திரா இருவரும் பா.ஜ.க. டிக்கெட்டில் கோகக் மற்றும் அரபாவி தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். சதிஷ் காங்கிரஸ் டிக்கெட்டில் ராய்ச்சூரில் போட்டியிடுகிறார். ரமேஷ் முன்னர் காங்கிரஸில் இருந்தார். 2019 இல் பா.ஜ.க.வில் சேர்ந்தார். மதச்சார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ காரணமாக இருந்தவர் இவர்தான். ஒரு டஜனுக்கும் மேலான எம்.எல்.ஏ.க்களுடன் கட்சி மாறியதால் ஆட்சி கவிழ்ந்தது. பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சிதான் என்கிறார் இவர்.
மறைந்த முன்னாள் அமைச்சரும் லிங்காயத்து தலைவராக இருந்தவருமான உமேஷ் கட்டி குடும்பத்தினருக்கு பெலகாவி மாவட்டத்தில் அரசியல் செல்வாக்கு உள்ளது. அவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட 2 டிக்கெட் கிடைத்துள்ளது, ரமேஷ் கட்டி, சிக்கோடி-சதாலகா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரின் உறவினர் நிகில் கட்டி, ஹக்கேரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலு அவரது உறவினர் சுரேஷ் பாபு இருவரும் பெல்லாரி ஊரகம் மற்றும் காம்ப்லி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் முதல்வர் எஸ்.பங்காரப்பாவின் மகன்களான குமார் மற்றும் மது இருவரும் வெவ்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிடுகின்றனர். குமார் பங்காரப்பா பா.ஜ.க. வேட்பாளராக ஷிவமொக்கா மாவட்டம் சோரப் தொகுதியில் போட்டியிடுகிறார். மது காங்கிரஸ் வேட்பாளராக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
பெங்களூர் மகாதேவபுரா தொகுதியில் முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவளிக்கு தேர்தல் டிக்கெட் மறுக்கப்பட்டதை அடுத்து அந்த தொகுதியில் அவரது மனைவி மஞ்சுளா போட்டியிடுகிறார்.
முன்னாள் அமைச்சர் மலிக்கய்யா குட்டேதார் கலபுர்கி மாவட்டம் அப்ஸல்பூரிலும் அவரது உறவினர் சுபாஷ் குட்டேதார் அலந்த் தொகுதியிலும் பா.ஜ.க. வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சி சிவசங்கரப்பாவை களத்தில் இறக்கியுள்ளது. அவரது மகன் மல்லிகார்ஜுன் தாவண்கரேயில் போட்டியிடுகிறார். 92 வயதான சிவசங்கரப்பா ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இந்த முறையும் நான்தான் ஜெயிப்பேன் என்கிறார் அவர்.
பெங்களூரில் முன்னாள் உள்துறை அமைச்சரும் கர்நாடக காங்கிரஸ் செயற்குழு தலைவருமான ராமலிங்க ரெட்டி பி.டி.எம். லேஅவுட் தொகுதியிலும் அவரது மகள் செளம்யா, ஜெயநகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் பிரமுகர் கே.ஹெச்.முனியப்பா தேவனஹள்ளி ரிசர்வ் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மகள் ரூபகலா கே.ஜி.எப். ரிசர்வ் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். எம்.கிருஷ்ணப்பா விஜயநகர் தொகுதியிலும், அவரது மகன் பிரியகிருஷ்ணா கோவிந்தராஜ் நகர் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் தேவெகெளட குடும்பத்தினர் தவிர்த்து ஜி.டி.தேவெகளட என்பவர் சாமுண்டீஸ்வரி தொகுதியிலும் அவரது மகன் ஹரிஷ் கெளட ஹன்சூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளைப் போல பா.ஜ.க. தந்தை, மகன் என்ற அளவில் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தமது ஷிகாரிபூர் தொகுதியை இளைய மகன் விஜயேந்திராவுக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங்கின் மகன் சித்தார்த் சிங், தந்தைக்கு பதிலாக விஜயநகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.