வாஜ்பாய் பிரதமராக இருந்த காலம் முதலே பா.ஜ.க.வின் முக்கிய புள்ளியாக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். மோடி அமைச்சரவையில் அயலுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது சமூக ஊடகங்கள் மூலமாக அவருக்கு வந்த வேண்டுகோள்களின் அடிப்படையிலேயே அவர் பலரது பிரச்னைகளுக்கு உடனடி நடவடிக்கைகள் எடுத்து, தீர்வு கண்டவர் என்பது தெரிந்ததே. அது மட்டுமில்லாமல்,
ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு ஐந்தாண்டுகாலம் முழுமையாக அயலுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் என்ற பெருமையும், இந்திரா காந்திக்குப் பிறகு அயலுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றிய பெண்மணி என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
2016ல் மாற்று சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட அவர், 2019ல் மரணமடைந்தார். 2020ல் மத்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.
இப்போது, திடீரென்று பா.ஜ.க.வுக்கு அவர் மீது கரிசனம் வந்திருக்கிறது. அவர் பெயரில் பெண்களுக்கான ஒரு விருதினை பா.ஜ.க. அறிவித்துள்ளது. தேசிய அளவிலும், மாநில அளவிலும் கட்சியின் மகளிரணி, இந்த விருதினை இனி ஆண்டுதோறும் அளிக்கும் என கட்சி அறிவித்துள்ளது.
தற்போது ஹரியான மாநில அரசாங்கத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனெரல் பதவி வகிக்கும் ஸ்வராஜின் மகள் பஞ்சூரியை டெல்லி பா.ஜ.க. சட்டப் பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளராக கட்சி மேலிடம் நியமித்துள்ளது. மேலும், ஜி20 மகளிர் குழுவும் துணைக்குழுவிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.
திடீரென்று சுஷ்மா ஸ்வராஜின் மகளுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் என்று கட்சிக்காரர்களுக்குக் குழப்பம் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம், எதற்காக அம்மா பெயரில் திடீர் விது அறிவிப்பு? என்று சுஷ்மாவின் மகளுக்கே குழப்பம்!
மோடி-அமித் ஷா- நட்டா மூவரணி எதைச்செய்தாலும் அதன் பின்னால் ஒரு கணக்கு இருக்கும் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்!