தேர்தலை சந்திக்க ஷிண்டேவுக்கு உத்தவ் தாக்கரே சவால்!

தேர்தலை சந்திக்க ஷிண்டேவுக்கு உத்தவ் தாக்கரே சவால்!

சிவசேனை கட்சியின் இரு பிரிவினரிடையிலான மோதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் முதல்வர் ஷிண்டேயும் அவரது கூட்டாளியான பா.ஜ.க.வினரும் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்கத் தயாரா என மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு நான் பதவியை ராஜிநாமா செய்தேன். இப்போது தார்மீக அடிப்படையில் நீங்கள் (ஷிண்டே) ராஜிநாமா செய்யுங்கள். நாம் எல்லோரு புதிதாக தேர்தலை சந்திப்போம் என்றும் அவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு போர்க்கொடி உயர்த்தியதால் ஆட்சி கவிழ காரணமாக இருந்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் விரைந்து ஒரு முடிவு எடுக்காவிட்டால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வெளிநாடு சென்றுள்ள பேரவைத் தலைவர், மும்பை திரும்பியதும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் ஆளுநர் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் ஷிண்டே முதல்வர் பதவியில் நீடிப்பது சரிதானா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த ஆண்டு அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஷிண்டே மற்றும் இதர 15 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றும் பேரவைத்தலைவருக்குதான் அத்தகைய அதிகாரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

மேலும் சட்டப்பேரவையில் தனது பலத்தை நிரூபிப்பதற்கு முன்னால் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜிநாமாச் செய்துவிட்டதால் மீண்டும் ஆட்சியமைக்க உத்தரவிட வேண்டும் என்ற உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை ஏற்கமுடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

எனினும் ஷிண்டேவுக்கு ஆதரவாக மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி எடுத்த முடிவுக்கும் அவரது செயல்பாடுகளுக்கும் கண்டனம் தெரிவிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. சரியான முடிவு எடுக்க ஆளுநர் தவறிவிட்டதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com